Published : 19 Aug 2022 12:01 PM
Last Updated : 19 Aug 2022 12:01 PM
தர்மபுரி: "காவிரி உபரி நீரில் 3 டிஎம்சி தண்ணீரை நீரேற்று நிலையத்தின் மூலமாக எடுத்துச்சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் மற்றும் அணைகளில் நிரப்ப வேண்டும். தருமபுரி - காவிரி உபரிநீர் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் ஒகனேக்கல்லில், தருமபுரி - காவிரி உபரிநீர் திட்ட பிரசார பயணத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கினார். பிரசார பயணத்தை தொடங்குவதற்கு முன்னர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "எங்களுடைய கோரிக்கை, காவிரியில் ஓடுகின்ற உபரிநீர் அதாவது ஒரு ஆண்டுக்கு, கிட்டத்தட்ட ஒரு 20, 25 நாட்களில் உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது.
அந்த உபரி நீரில் 3 டிஎம்சி தண்ணீரை நீரேற்று நிலையத்தின் மூலமாக எடுத்துச்சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள் மற்றும் அணைகளில் நிரப்ப வேண்டும். இந்த ஆண்டு காவிரி நீர் அதிகளவு கடலில் கலந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் விநாடிக்கு காவிரியில் இரண்டேகால் லட்சம் கனஅடி நீர் காவிரியில் சென்றது.
இன்றுவரை காவிரியிலிருந்து ஒரு வார காலமாக கடலில் கலக்கிற தண்ணீர் 161 டிஎம்சி, இதில் நாங்கள் கேட்பது வெறும் 3 டிஎம்சிதான். இந்த ஆண்டு இறுதிக்குள் காவிரியில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீரின் அளவு 200 டிஎம்சிக்கு மேல் இருக்கும். இந்த மாவட்டத்திற்கான தண்ணீர் தேவைக்கான தீர்வு இந்த ஒரு திட்டம்தான், நிதியும் அதிகளவில் தேவைப்படாது. 700 முதல் 800 கோடி வரைதான் தேவைப்படுகிறது.
கடந்த ஆட்சியில் நிதி இல்லாத காரணத்தால், இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. எனவே தற்போதைய முதல்வரிடம் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT