Published : 19 Aug 2022 07:00 AM
Last Updated : 19 Aug 2022 07:00 AM

100-வது சுதந்திர தின விழாவில் இந்தியா பல்வேறு துறைகளில் பல மைல்கற்களை எட்டும்: ஆளுநர் ரவி நம்பிக்கை

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 37-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பு இயக்குநர் சேதுராமன் பஞ்சநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன். அருகில், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்

வேலூர்: இந்தியா 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பல்வேறு துறைகளில் பல மைல்கற்களை எட்டியிருக்கும் என தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கில் 37-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க துணை தூதர் ஜூடித் ரவின், இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் வாரி சந்திரசேகர் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் இயக்குநர் சேதுராமன் பஞ்சநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வேந்தர் கோ.விசுவநாதன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் வழங்கினர்.

பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கிய வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, ‘‘நாம் வளர்ந்து வரும் நாடாக இருப்பதால் உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனைத்து கட்சிகளும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்தியாவில் 14 கோடி பேர்உயர்கல்வி படிக்க தகுதி பெற்றாலும் 3.5 கோடி பேர் மட்டும் உயர்கல்வி படிக்கின்றனர்’’ என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க துணை தூதர் ஜூடித் ரவின் பேசும்போது, ‘‘இங்கு பட்டம் பெறுபவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். நீங்கள் அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க வாய்ப்புள்ளது. இங்கு பட்டமளிப்பு விழா என்பதை எங்கள் நாட்டில் ஆரம்பிக்கும் (கமென்ஸ்மென்ட்) நாள் என நடத்துவோம். ஆம், உங்கள் வாழ்க்கையில் இது புது ஆரம்பம்’’ என்றார்.

விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, ‘‘இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயக நாடுகள். இரு நாடுகள் இடையே நீண்ட கால நட்புறவு உள்ளது.

உலக ஒழுங்கை பராமரிப்பதில் அமெரிக்கா தனது பொறுப்பை ஏற்றது. இதை சீர்குலைக்கும் நோக்கில் சில வளர்ந்து வரும் நாடுகள் முயல்கின்றன. உலகளாவிய ஒழுங்கை இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பகிரப்பட்ட பொறுப்புடன் பராமரிக்க முடியும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை கொண்டாடும் நேரத்தில் அடுத்த 25 ஆண்டுகள் முக்கியமானது. 2047-ம் ஆண்டில் நாடு நூறாவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், பல்வேறு துறைகளில் பல மைல்கற்களை எட்டியிருக்கும். பள்ளி மாணவர்கள் செயற்கைக்கோள்களை தயாரிக்கும் நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

கரோனா தொற்று காலத்தில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற உள்நாட்டு நிர்பந்தங்கள் இருந்தபோதிலும், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கியுள்ளோம். நாட்டில் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

இளநிலை, முதுநிலை படிப்பில் 8,168 பேர், ஆராய்ச்சி மாணவர்கள் 215 பேர் பட்டம் பெற்றனர். டி.எம்.வெங்கடேசன் என்பவர் தனது 75-வது வயதில் வணிகவியல் துறையில் ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார். இதில், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், துணை வேந்தர் ராம்பாபு கோடாளி, இணை துணை வேந்தர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x