Published : 18 Aug 2022 03:25 PM
Last Updated : 18 Aug 2022 03:25 PM
சென்னை: தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர்.
மகாகவி பாரதியார், பெருந்தலைவர் காமராஜர், கவியரசர் கண்ணதாசன் ஆகியோரைப் பற்றி நெல்லை கண்ணன் ஆற்றிய சொற்பொழிவுகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை எவரும் மறந்திட இயலாது.
இலக்கிய பட்டிமன்ற நடுவராக பொறுப்பேற்று கூறிய கருத்துகள் மிக ஆழமானவை, சிந்திக்கக் கூடியவை. மிகுந்த நகைச்சுவையோடு பேசக் கூடியவர். காங்கிரஸ் பேரியக்கத்தில் இளமைப் பருவம் முதல் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றி பல பொறுப்புகளை வகித்தவர்.
தமிழகம் அறிந்த நெல்லை கண்ணனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT