Published : 18 Aug 2022 01:17 PM
Last Updated : 18 Aug 2022 01:17 PM

சிறந்த ஆலோசகர்களால் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது: அமைச்சர் பிடிஆர் பேச்சு

சென்னை: "நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் முதல் ஆளாக ஏற்போம் எனவும், சர்வாதிகாரமாக சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்றும்" நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் 586 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது மேடையில் பேசிய நிதி அமைச்சர் பிடிஆர்., "ஒரு சமுதாயத்திற்கு கலாச்சாரமும், மொழியும் எவ்வளவு முக்கியமோ, ஒரு இயக்கத்துக்கு கொள்கையும், தத்துவமும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஒரு அரசுக்கு மனிதநேயமும், செயல்திறனும். கொள்கையை விடவும் மனிதநேயமும், செயல்திறனும் தான் ஒரு அரசியல்வாதிக்கு மிக முக்கியம்.

இலவசத் திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கிறதா என பெரிய விவாதங்கள் நடக்கிறது. அந்த, விவாதங்களுக்கு அப்பால் முக்கியமானது செயல்திறன் தான். அரசு செயல்படுத்தும் திட்டம் சரியாக அனைத்து மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பதே முக்கியம். தமிழக/இந்திய வரலாற்றிலேயே பொருளாதாரம், சட்டம், மனிதவளம் உள்ளிட்ட அனைத்து துறையிலும் சிறந்த மேலாண்மையை உருவாக்கி, உலகத்திலேயே சிறந்த ஆலோசகர்கள் அறிவுரையின் அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்போது தனிநபர் அறிவுரை அளிப்பது போல அரசியல் ரீதியாக சிலர் அறிவுரை வழங்கி கொண்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே நோபல் பரிசு பெற்ற பொருளாதார பேராசிரியர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர், பிரதமருக்கு தலைமை ஆலோசகர்களாக இருந்த இரண்டு நபர் ஆகியோரின் அறிவுரைகளை கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதற்குமேல் அரசமைப்புக்கு மீறி யார் அளிக்கும் அறிவுரையும் எங்களுக்கு தேவையில்லை. நல்ல கருத்துக்களை, மனிதநேயமிக்க அறிவுரைகளை யார் சொன்னாலும் முதல் அரசாக ஏற்போம். ஆனால், சர்வாதிகாரமாக எங்களுக்கு தான் உரிமை, தகுதி உள்ளது என்பது போலும், நாங்கள் சொல்வதை தான் பின்பற்ற வேண்டும் எனும் அடிப்படையில் சொல்லும் அறிவுரைகளை ஒருபோதும் பின்பற்ற மாட்டோம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x