Published : 18 Aug 2022 12:22 PM
Last Updated : 18 Aug 2022 12:22 PM

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூன்றில் இரு பங்கு மூடியது மிகப்பெரிய அநீதி: அன்புமணி

அன்புமணி ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் மூன்றில் இரு பங்கு நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூன்றில் இரு பங்குக்கும் கூடுதலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆணையிட்டுள்ளது.

தமிழகத்தின் மேலும் பல மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. ஏற்கனவே நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை போதுமானவையாக இல்லை என்று கூறப்படும் நிலையில், இருக்கும் மையங்களையும் மூடுவது உழவர்களை பாதிக்கும்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவதை காரணம் காட்டி இந்த மாவட்டங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகவே 49 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தான் செயல்பட்டு வந்தன. அவற்றிலும் 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்றுடன் மூடப்பட்டு விட்டன. இனி 14 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் தான் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் பயிரிடப்படும் பரப்பு, சாகுபடி செய்யப்படும் அளவு ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தான் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. அடுத்த 6 மாதங்களில் அவற்றில் 13 கொள்முதல் நிலையங்களும், ஏற்கெனவே செயல்பட்டு வந்த 29 நெல் கொள்முதல் நிலையங்களில் 22 நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தின் தேவையை கருத்தில் கொண்டு பிப்ரவரியில் 20 கொள்முதல் நிலையங்களை திறக்க ஆணையிட்டவர் விழுப்புரம் மாவட்டத்தின் இன்றைய ஆட்சியர் மோகன் தான். இப்போது அவரே 35 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட ஆணையிட்டிருக்கிறார். இது எந்த வகையில் நியாயம்?

காவிரி பாசன மாவட்டங்கள் தான் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று கூறப்பட்டாலும் கூட, அவற்றை விட வட மாவட்டங்கள் தான் அதிக அளவில் நெற்பயிரை சாகுபடி செய்கின்றன. தமிழகத்தில் நெல் உற்பத்தித் திறனில் முதலிடத்தில் இருப்பது விழுப்புரம் மாவட்டம் தான். அங்கு ஒரு ஹெக்டேரில் 4,490 கிலோ நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இது தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் சராசரி உற்பத்தித் திறனை விட ஒரு டன் அதிகமாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.856 லட்சம் ஹெக்டேரில் 6.834 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் 1.105 லட்சம் ஹெக்டேரில் 4.962 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடியில் இத்தகைய சாதனைகளை படைக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கு, கொள்முதல் நிலையங்கள் குறைப்பு தான் பரிசா?

விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் குறைக்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல்லின் அளவில் 73% விழுப்புரம் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. அதன்படி பார்த்தால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 214 கொள்முதல் நிலையங்களில் 73%, அதாவது 156 நிலையங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் திறக்கப்பட வேண்டும். தமிழகத்தின் மொத்த நெல் உற்பத்தியான 75.50 லட்சம் டன்னில் 6.57% விழுப்புரம் மாவட்டத்தில் விளைகிறது.

அந்த அடிப்படையில் பார்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் 193 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும். ஆனால், எந்தவகையிலும் இல்லாமல் வெறும் 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் இருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல்லில் பாதிக்கும் குறைவாகத் தான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றன. மீதமுள்ள நெல் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும்; மாறாக இருக்கும் கொள்முதல் நிலையங்களையும் மூடக் கூடாது.

இதை மனதில் கொண்டு, உழவர்களின் நலனைக் காக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x