Published : 18 Aug 2022 11:08 AM
Last Updated : 18 Aug 2022 11:08 AM
சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அதிமுக ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக நேற்று, அதிமுக பொதுக் குழு செல்லாது, இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டது செல்லாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் செய்த தியாகங்களை சிந்தித்து அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், " அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை தொண்டர்களுக்காக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் உருவாக்கினார். அவர் உயிரோடும் இருக்கும்வரை, யாராலும் வெல்லமுடியாத இயக்கமாக, மக்களின் பேராதரவைப் பெற்று, மக்களின் மனம் கவர்ந்த முதல்வராக தமிழகம் மற்றும் இல்லாமல், இந்திய அரசியல் வானில் வலம் வந்தார்.
அவரது மறைவுக்குப் பின்னால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று 30 ஆண்டுகாலம், அதிமுகவுக்கு வந்த வேதனைகள், சோதனைகள், இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் சதிவேலைகளை எல்லாம் முறியடித்து, எம்ஜிஆர் உயிரோடு இருந்தபோது, 17 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவை, ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அவர் உருவாக்கினார். 16 ஆண்டுகாலம் முதலமைச்சராக இருந்து நல்லாட்சி நடத்தினார்.
கட்சி ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தபோது, இன்றைக்கு இருக்கும் எந்த கட்சியாலும் வெல்லமுடியாத இயக்கமாக எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கினார்கள். அதிமுகவில் சில சில பிரச்சினைகள், எங்களுக்குள் கருத்து வேற்றுமையால் பிளவு ஏற்பட்டிருக்கின்ற நேரத்தில் எல்லாம், திமுக ஆளுங்கட்சியாக வரமுடிந்த சூழல் இருந்தது. இன்றைக்கும் அந்த சூழ்நிலைதான் நிலவி இருக்கிறது.
எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சமீபத்தில் ஏற்பட்ட இந்த பிரச்சினைகளால் இன்று ஒரு அசாதாரண சூழல் அதிமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த அசாதாரணமான சூழ்நிலையை எங்கள் மனங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு
கழகம் ஒன்றுபட வேணடும். எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த கட்சிக்காக செய்த தியாகங்களை எண்ணி, மீண்டும் தமிழகத்தை ஆளுகின்ற பொறுப்பை, மக்களுக்கு சேவையாற்றுகின்ற பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு உறுதியாக நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதுதான், எங்களுடைய உறுதியான நிலைப்பாடு.
நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். அது எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எங்களுக்கு பாதிப்பாக இருந்தது என்று நான் எந்தக் காலத்திலும் சொல்லமாட்டேன். அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் இருக்கின்றனர்.
பல பகுதிகளில் இருந்து எங்களுக்கு அந்த செய்தி வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னால் ஏற்பட்ட கசப்புகளையும் யாரும் அதனை மனதில் வைக்காமல், தூக்கியெறிந்துவிட்டு, கழகத்தின் ஒற்றுமையே பிரதான கொள்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT