Published : 18 Aug 2022 06:42 AM
Last Updated : 18 Aug 2022 06:42 AM

ரயிலில் இருந்து விழுந்த பெண் கார்டு உயிரிழப்பு: விசாரணைக்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவு

மினிமோல்

சென்னை: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் கார்டு உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணைக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சிவதாஸ். இவரது மனைவி மினிமோல்(36). இவர், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் தங்கியபடி, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே கார்டாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை கவுகாத்தி விரைவு ரயிலில் சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை கார்டாகப் பணிபுரிந்தார்.

அந்த ரயில் குடியாத்தம்-வளத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, மினிமோல் பச்சைக் கொடியைக் காட்ட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து, அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலை நிறுத்திய ஓட்டுநர்

இதற்கிடையில், கார்டு மூலம் தகவல் கிடைக்காததால் குழப்பமடைந்த ரயில் ஓட்டுநர், ஆம்பூரை அடுத்த பச்சகுப்பம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி, பச்சகுப்பம் ரயில் நிலைய மேலாளருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்தார். பின்னர் கார்டு பெட்டிக்குச் சென்று பார்த்தபோது, கார்டு மினிமோல் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

ரயில்வே ஊழியர்கள் கார்டு மினிமோலைத் தேடியபோது, 2 கி.மீ. தொலைவில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் அங்கு சென்று, மினிமோலின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இருவர் குழு

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்லையா நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்ட முதுநிலைப் பொறியாளர்கள் இருவர் கொண்ட குழு விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x