Published : 22 Oct 2016 11:22 AM
Last Updated : 22 Oct 2016 11:22 AM

செயல்படாமல் முடங்கிய 50 சதவீதம் கேமராக்கள்: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கண்காணிப்பில் சிக்கல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 50 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பதால், மருத்துவமனை வளாகத்தில் உயர் அதிகாரிகள், போலீஸார் கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு, தினமும் 10 ஆயிரம் வெளி நோயாளிகள், 3 ஆயிரம் உள்நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். கடந்த காலத்தில் மருத்துவமனையில் குழந்தை திருட்டு, சிகிச்சைக்கு பணம் கேட்பது, அவசர காலங்களில் விரைவான சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் தவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. அதனால், மருத்துவமனையில் காவல்துறை சார்பில் போலீஸார் மருத்துவமனை வளாகங்கள், வார்டுகளை கண்காணிக்க 36 கண்காணிப்பு கேமராக்களும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டீன் கண்காணிக்க 12 கேமராக்களும் பொருத்தினர். ஆரம்பத்தில் இந்த கேமராக்கள் பழுதடைந்தால், உடனே சீரமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு தொய்வின்றி நடந்தது.

குழந்தை வார்டுகளில் திருட்டைத் தடுக்க பிறக்கும் ஒவ்வொரு குழந்தை கையிலும், ரேடியோ அதிர்வலை கைப்பட்டை பொருத்தப்பட்டது.

மருத்துவமனையின் இந்த நடவடி க்கையால், தற்போது குழந்தை திருட்டு தடுக்கப்பட்டது. நோயாளிகளிடம் பணம் கேட்க மருத்துவமனை பணியாளர்கள் அச்சமடைந்தனர். பிரச்சினை ஏற்பட்டால் கேமராவில் கண்காணித்து, போலீஸார் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை சரி செய்தனர்.

இந்நிலையில், தற்போது 50 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து மருத்துவமனை வளாகம், வார்டுகளை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீஸார் கண்காணிப்பு கேமராவில் 17 கேமராக்கள் பழுதடைந்துள்ளன. அதனால், மருத்துவமனையில் எந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை போலீஸாரால் கண்காணிக்க முடியவில்லை. மருத்துவமனையின் 12 கண்காணிப்பு கேமராக்களில் 7 கேமராக்கள் பழுதடைந்துள்ளன. அதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர் நடவடிக்கைகளை டீன் கண்காணிக்க வாய்ப்பில்லாமல் போகிறது.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது, மருத்துவமனையில் சில இடங்களில் வயர்கள் பழுதடைந்துள்ளதால் கேமராக்கள் செயல்படாமல் இருக்கிறது. அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மருத்துவமனை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, எல்லா கேமராக்களும் நல்ல நிலையில் இருக்கின்றன.

தொழில்நுட்பக் கோளாறால் சில கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தெரிவதில்லை. ஆனால் பதிவாகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x