Last Updated : 25 Oct, 2016 12:57 PM

 

Published : 25 Oct 2016 12:57 PM
Last Updated : 25 Oct 2016 12:57 PM

பட்டாசு கடைகளுக்கு கடுமையான விதிமுறைகள்

விபத்தில்லா தீபாவளிக்கு பட்டாசு கடைகளுக்கு வெடி பொருள் சட்டத்தை முழுமையாக பின்பற்றி அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சிவகாசியில் சில நாட்களுக்கு முன்பு பட்டாசு குடோன் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த மருத்துவர் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவத்தை உயர் நீதிமன்ற கிளை தானாக முன்வந்து பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத்தது. அப்போது பட்டாசு விபத்துகளுக்கு ஒட்டு மொத்த அதிகாரிகள் தான் காரணம் என நீதிபதிகள் கண்டித்தனர். பட்டாசு ஆலைகள், குடோன்கள், தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்குவது எப்படி? அந்த கடைகள் எப்படியிருக்க வேண்டும்? என வெடி பொருள் சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. பணத்தை வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கிவிடுகின்றனர். ஆய்வுக்கும் செல்வதில்லை. விபத்துக்கும் பிறகும் விழித்துக்கொள்வதில்லை. இதனால் விபத்துகள் தொடர்கின்றன.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாள் தான் உள்ளது. தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. சட்ட விதிகளை பின்பற்றி பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கி உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர் ஆர்.காந்தி கூறியதாவது:

விழா காலங்களில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க, வெடி பொருள் சட்டம் 84ன்படி உரிமம் வழங்கப்படுகிறது. வெடி பொருளின் அளவை பொருத்து மாநகர் காவல் ஆணையர் அல்லது வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி அல்லது தலைமை வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் பட்டாசு கடை வைக்க அனுமதி பெற வேண்டும். தீயணைப்பு துறை, கடை அமையும் நிலத்தின் உரிமையாளர், சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் தடையில்லா சான்று பெற்று மனுவுடன் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

தற்காலிக பட்டாசு கடைகளை பொறுத் தவரை பொதுமக்கள் வசிப்பிடங்களில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றாத பொருள்களால் கடைகள் அமைக்க வேண்டும். வெளிநபர்கள் உள்ளே நுழைந்துவிடாதபடி கடை முற்றிலும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். எதிர் எதிரில் பட்டாசு கடை அமைந்திருக்கக்கூடாது. கடை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. ஒரே நேரத்தில் 50 கடைக்கு அதிகமாக அனுமதி வழங்க முடியாது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசு வெடிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2005ல் உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகமான சத்தம் கொண்ட வெடிபொருள்களை தயாரிப்பதும், வெடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. சாதாரண வெடியில் சத்தம் 125 டெசிபலுக்கு அதிகமாகவும், வாணவெடியில் 90 டெசிபல் அதிகமாகவும் இருக்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதிகளை பின்பற்றி உரிமம் வழங்கினாலே விபத்துகள் நடைபெறுவதை தவி்ர்க்க முடியும். மேலும் பட்டாசு கடை உரிமம் வழங்குவதற்கு முன்பு கடை அமையவுள்ள இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த பிறகே உரிமம் வழங்க வேண்டும்.

சென்னையில் தீபாவளி பண்டிகையின் போது ஆண்டுதோறும் கூவம் ஆற்றங் கரையில் பட்டாசு மொத்த விற்பனை நடைபெறுவது வழக்கம். கடந்த 2013ல் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்க மாநகராட்சி மறுத்தது. இதை எதிர்த்து பட்டாசு கடைகாரர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டது. அப்போது வெடி பொருள் சட்டத்தை அதிகாரிகள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x