Published : 16 Oct 2016 10:38 AM
Last Updated : 16 Oct 2016 10:38 AM

ஓட்டுநர்களுக்கு கால அட்டவணை வழங்காததால் சரியான நேரத்துக்கு ரயில்களை இயக்குவதில் சிக்கல்

விரைவு ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிட்டு 15 நாட்கள் ஆகியும் ரயில் ஓட்டுநர்கள், நிலைய அதிகாரிகளுக்கு பணிக்கான கால அட்டவணையை வழங்காததால், அறிவித்தபடி சரியான நேரத்துக்கு ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சில இடங்களில் பயணிகள் ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ரயில்களின் கால அட்டவணையை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். இந்த ஆண்டில் சற்று தாமதமாக செப்டம்பர் 29-ம் தேதி புதிய கால அட்டவணை அறிவிக்கப்பட்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

சில இடங்களில் இரட்டைபாதை பணிகள் நிறைவு, விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் 38 ரயில்கள் 20 நிமிடத்தில் இருந்து 60 நிமிடம் வரையும், 7 ரயில்கள் 60 நிமிடத்தில் இருந்து 90 நிமிடம் வரையும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, சிலம்பு, ராமேஸ்வரம் விரைவு ரயில்களில் 90 நிமிடங்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து புறப்படும், வந்தடையும் 59 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் புதிய கால அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்பே விரைவு ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள், நிலைய கட்டுப்பாட்டாளர்கள், நிலைய அதிகாரிகளுக்கு பணிக்கான கால அட்டவணை (வொர்க்கிங் டைம் டேபிள்) தனியாக வழங்கப்படும். இதில், ஒவ்வொரு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்து செல்லும் நேரம், வேக அளவு, வேகம் அதிகரிக்கப்பட்டுள்ள இடங்கள் போன்ற முக்கிய குறிப்புகள் இடம்பெற்று இருக்கும். இந்த ஆண்டு பயணிகளுக்கான புதிய காலஅட்டவணை வழங்கி 15 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் பணிக்கான காலஅட்டவணை வழங்கப்பட வில்லை. இதனால், புதிய கால அட்டவணைப்படி விரைவு ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவு ரயில் ஓட்டுநர்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் பயணிகளுக்கான புதிய காலஅட்டவணை வெளியிடுவதற்கு முன்பே ரயில்வே இயக்கப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு பணிக்கான கால அட்டவணை வழங்கப்படும். அதன்படி, நாங்களும் தயாராகி ரயில்களை திட்டமிட்டு இயக்குவோம். ஆனால், இந்த ஆண்டு இன்னும் எங்களுக்கான கால அட்டவணை வழங்கவில்லை. இதனால் சில ரயில்கள் சரியான நேரத்தில் செல்லாததால் பயணிகள் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை – கன்னியாகுமரி இடையே இரட்டைபாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் பாதுகாப்பு விஷயங்களை கருத்தில்கொண்டு ரயில்கள் மெதுவாக செல்கின்றன. இதன் அடிப்படையில் நேரத்தை நிர்ணயிக்காமல், அதிகபட்சமான வேகத்தின் அடிப்படையில் நேரத்தை நிர்ணயம் செய்துள்ளது சரியானது அல்ல. எனவே, உண்மையான வேக அளவை கொண்டு ரயில்களின் நேரத்தை நிர்ணயிக்க வேண்டும். மேலும், ரயில் இயக்க பிரிவு உள்ள அலுவலர்களுக்கு உடனடியாக பணிக்கான காலஅட்டவணையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x