Published : 18 Aug 2022 03:52 AM
Last Updated : 18 Aug 2022 03:52 AM

ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம்

சென்னை: ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டமும், அதன்மூலம் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்வு செய்ததும் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுகவில் ஜூன் 23-க்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை எழுந்த நிலையில், கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் பாதியிலேயே வெளியேறினார். அதன்பின், கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கவும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கவும் கோரி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வமும், பொதுக்குழு உறுப்பினரான அம்மன் பி.வைரமுத்துவும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு நடப்பதாக அறிவிக்கப்பட்ட ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்கு, திட்டமிட்டபடி பொதுக்குழுவை நடத்தலாம் என தீர்ப்பளித்தார். அதன்படி, நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றமே விசாரித்து இரு வாரங்களில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு மீண்டும் தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக
விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், கட்சி விதிகளின்படி பொதுக்குழு நடந்ததா, இல்லையா என்பது குறித்து மட்டும் வாதிட இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் கோரிக்கை விடுத்தார். உச்ச நீதிமன்றம் இரு வாரங்கள் அவகாசம் அளித்திருந்த நிலையில் இரண்டே நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை 11-ல் நடந்த பொதுக்குழுக் கூட்டம், கட்சி விதிகளின்படி முறையாக நடக்கவில்லை என்பதால் அந்தக் கூட்டம் செல்லாது. எனவே, அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும். இதன்மூலம், பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் பதவிக்காலம் 2026 வரை உள்ளது. இந்தச் சூழலில் அந்தப் பதவிகள் திடீரென காலாவதியாகி விட்டதாக கூற முடியாது. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் தற்காலிக அவைத் தலைவருக்கு இல்லை. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்தே செயற்குழு, பொதுக்குழுவை கூட்ட முடியும்.

அவர்கள் இருவரும் இணைந்து ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்ட எந்தத் தடையும் இல்லை. ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட விருப்பம் தெரிவித்தால் 15 நாட்களுக்கு முன்பாக முறைப்படி நோட்டீஸ் கொடுத்து, 30 நாட்களில் இருவரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட வேண்டும். இருவரும் இணைந்து கூட்டுவதில் சிக்கல் எழுந்தால், சட்ட ரீதியாக பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க நீதிமன்றத்தை நாடலாம்.

ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என அறிவிக்காவிட்டால், பழனிசாமி சவுகர்யமாக தனது பதவியில் அமர்ந்து விடுவார். அது, தொண்டர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து போன்றவர்களுக்கும் பாதகமாகிவிடும். இரட்டைத் தலைமையுடன்தான் இருவரும் சிறப்பாக கட்சியை வழிநடத்தி, ஆட்சியையும் நடத்தி வந்துள்ளனர். இந்தச் சூழலில் திடீரென ஒற்றைத் தலைமை எப்படி உருவானது என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்றுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் இனிப்பு கொடுத்தும், பட்டாசு வெடித்தும் இதை கொண்டாடினர்.

இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு?

இந்த தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, “உயர் நீதிமன்ற தீர்ப்பு என்பது இறுதியான தீர்ப்பு இல்லை. அதிமுக சட்ட விதிகள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன. அதன்படிதான் பொதுக்குழு நடத்தப்பட்டது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த தற்காலிக வெற்றிதான். ஆணையர் முன்னிலையில் பொதுக்குழு நடத்த வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அப்படி நடத்தப்படும் பொதுக்குழுவில் 95 சதவீதம் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவு இருக்கும். இந்த தீர்ப்பு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கையை கட்சித் தலைமை எடுக்கும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x