Published : 18 Aug 2022 06:04 AM
Last Updated : 18 Aug 2022 06:04 AM
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் பல்வேறு இடங்களில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ராயப்பேட்டை-திருவான்மியூர் மற்றும் நாதமுனி-ரெட்டேரி வழித்தடங்களில் பூமிக்கு அடியில் உள்ள வலிமையான பாறைகள் சுரங்கப்பாதை பணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடைபெறுகின்றன.
3 வழித்தடங்களில் 41.6 கிமீ தொலைவுக்கு சுரங்கத்திலும், 77.3 கிமீ தொலைவுக்கு உயர்மட்டத்திலும் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. உயர்மட்ட பாதையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூந்தமல்லி-பவர் ஹவுஸ் வரையிலான வழித்தடம் முன்னுரிமை அடிப்படையில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்மட்ட பாதை பணிகளை நிர்ணயித்த ஆண்டுக்குள் முடித்தாலும், சுரங்கப்பாதை பணியை முடிப்பதில் ஓர் ஆண்டு வரை தாமதம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த தாமதத்துக்கு பூமிக்கடியில் உள்ள வலுவான பாறைகளே முக்கியக் காரணமாக உள்ளது. இந்தப் பாறைகளை குடைந்து, பாதை அமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாறைகள் அதிகம்
மாதவரம்-சிப்காட் சிறுசேரி வரை 3-வது வழித்தடத்தில் 26.7 கிமீ தொலைவுக்கு சுரங்கத்தில் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில், மாதவரம்-ராயப்பேட்டை வரை பூமிக்கு அடியில் பாறைகள் குறைவாகவே உள்ளன. அதே நேரத்தில், ராயப்பேட்டை முதல் திருவான்மியூர் வரை பாறைகள் அதிகமாக இருக்கின்றன. இந்தப்பாதையில் படிப்படியாக பாறைகள் அதிகரிக்கின்றன. குறிப்பாக, மந்தைவெளி முதல் திருவான்மியூர் வரை மிகக் கடினமான பாறைகள் சில அடி ஆழத்திலேயே உள்ளன.
இதுபோல, மாதவரம்-சோழிங்க நல்லூர் வழித்தடத்தில், நாதமுனி-கொளத்தூர் வரை பாதையில் நாதமுனி-ரெட்டேரி வரை 5.5 கிமீ தொலைவுக்கு ஒரே மாதிரியாக பூமியில் சில அடி ஆழத்திலேயே பாறைகள் வருகின்றன. இங்கு சுரங்கப்பாதை அமைக்கும் இயந்திரம் (டிபிஎம்) மிகவும் சிரமப்படும். இதன் காரணமாக, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சில இடங்களில் சுரங்கப்பாதை அமைப்பதில் மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன.
8 சுரங்க இயந்திரங்கள்
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது: ராயப்பேட்டை- திருவான்மியூர் வரை பாறைகள் மிக அதிக அளவில் உள்ளன. இதுதவிர, கலங்கரை விளக்கம்-பவுர் ஹவுஸ் பாதையில், திருமயிலை அருகே மிகப்பெரிய பாறைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருமயிலை முதல் கச்சேரி சாலை வரை பாறைகள் உள்ளன.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலமாக, ஒரு நாளைக்கு சராசரியாக 10 முதல் 15 மீட்டர் சுரங்கம் தோண்டப்படும். ஆனால், பூமிக்கடியில் பாறை இருந்தால், 4 முதல் 5 மீட்டர் வரை தான் தோண்ட முடியும். இந்தப் பாதைகளில் 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். பாறைகள் உள்ள இடங்களில் கூர்மையான பற்களைக் கொண்ட சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
சற்று தாமதம் ஏற்படும்
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் முன்னாள் இயக்குநரும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்ட பொது ஆலோசகருமான ஆர்.ராமநாதன் கூறியதாவது: பூமிக்கடியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது பாறை, தண்ணீர் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதில், பாறை உள்ள இடங்களில் பணி சற்று தாமதமாகும்.
ஆனால், சுரங்கப்பாதை பணி நிற்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்.சுரங்கப் பாதையில் செல்வதற்கும், வருவதற்கும் 2 பாதைகள் அமைக்கப்படும். இவற்றுக்கு தொடர்பை ஏற்படுத்தும் விதமாக, குறுக்குப் பாதை அமைக்கும் போது, மிகக் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி எந்தவித பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT