Published : 17 Aug 2022 09:00 AM
Last Updated : 17 Aug 2022 09:00 AM
திருப்பூர் மாநகராட்சியில் ‘ஒரு குரல் புரட்சி’ திட்டத்தில் சாலை சீரமைப்பு மற்றும் சாக்கடை கட்டுவது தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் நிலவும் குறைகளை தீர்க்கும் வகையில், ‘ஒரு குரல் புரட்சி’ என்ற திட்டத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கடந்த 13-ம் தேதி தொடங்கி வைத்தனர். பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக மாநகராட்சி சார்பில் 155304 என்ற இலவச தொடர்பு எண் அறிமுகம் செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலகத்தின் கட்டிடத்தில், மாநகரின் 60 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில், 14 ஊழியர்களுடன் ‘ஒரு குரல் புரட்சி’ கட்டுப்பாட்டு அலுவலக அறை செயல்பட்டு வருகிறது. தற்போது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 11 துறைகளில் 300-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பொதுமக்கள் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவுக்குள் குறைகள், புகார்கள் மீதான நடவடிக்கை தொடர்பாக தொடர்புடைய நபரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, “இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள்முதல் தினமும் 60-க்கும் மேற்பட்ட புகார்கள் வருகின்றன. பிரதானமாக குடிநீர் குழாய் உடைப்பு, தெருவிளக்கு சீரமைப்பு, குப்பை அள்ளாதது, பாதாள சாக்கடைப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டியும் என பல்வேறு புகார்கள் வருகின்றன.
அதிகப்படியான புகார்கள் வருவதால், இத்திட்டத்தை இரண்டாக பிரித்து பணி செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது, உடனடி தீர்வு காண ஒரு பிரிவாகவும், நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மற்றொரு பிரிவாகவும் பிரித்து பணியாற்ற வேண்டியுள்ளது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT