Published : 17 Aug 2022 06:13 AM
Last Updated : 17 Aug 2022 06:13 AM

ராமேசுவரம் பேக்கரும்பு பகுதியில் உள்ள கலாம் நினைவிடத்தை பார்வையிட்ட 1 கோடி பேர்

ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாம் நினைவிடத்தில் ஒரு கோடி பார்வையாளர்களைக் கடந்த பிறகு வந்தவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ராமேசுவரம்: முன்னாள் குடியசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு அவரது நினைவாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சார்பில் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை 27.7.2017 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கலாம் நினைவகத்தின் நுழைவுப் பகுதியில் அவர் வீணை வாசித்தவாறு அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப்புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இங்குள்ள 4 காட்சிக் கூடங்களில் கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரோனா காலகட்டத்தில் சுமார் 525 நாட்களுக்கு மூடப்பட்ட நினைவிடம் 24.8.2021 அன்று பொதுமக்கள் பார்வைக்காக மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டு ஆக.15 அன்று 1,846 நாட்கள் ஆகியுள்ளன. இந்நிலையில் திங்கட்கிழமையுடன் ஒரு கோடி பார்வையாளர்கள் கலாம் நினைவிடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இதை டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்த பிறகு வந்த பார்வையாளர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x