Published : 29 Oct 2016 02:51 PM
Last Updated : 29 Oct 2016 02:51 PM

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா விரிவாக்கம் செய்யப்படுமா?

கோவை மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் வ.உ.சி. உயிரியல் பூங்காவை விரிவாக்கம் செய்ய வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

கோவை மாநகரின் மையப் பகுதியில், நேரு விளையாட்டு அரங்கில் அருகில் அமைந்துள்ளது வ.உ.சி. உயிரியல் பூங்கா. 1965-ல் தொடங்கப்பட்ட இந்தப் பூங்காவில் தொடக்கத்தில் முயல், வாத்து, யானை, புலி உள்ளிட்டவைகள் இருந்துள்ளன. எனினும், இடப்பற்றாக்குறை காரணமாகவும், வன விலங்குகள் சட்டம் காரணமாகவும் பெரிய விலங்குகள் இங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டன.

தற்போது, நரி, குரங்கு, மயில், கிளி, மான், பாம்பு என 800-க்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் இங்கு உள்ளன. ஏறத்தாழ 4.35 ஏக்கர் பரப்பில் உள்ள உயிரியல் பூங்காவில், 200-க்கும் மேற்பட்ட மரங்கள் இருப்பதால், குளுகுளு சூழல் நிலவுகிறது. பூங்காவில் நிலவும் தட்டவெப்பநிலை காரணமாகவும், விலங்குகள், பறவைகளைக் காணவும் தினமும் ஏராளமானோர் இங்கு வருகின்றனர்.

3 ஆயிரம் பேர்

வார நாட்களில் 500-க்கும் மேற்பட்டோரும், விடுமுறை நாட்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் இங்கு பார்வையாளர்களாக வருகின்றனர். இதையொட்டியுள்ள குழந்தைகள் பூங்காவில், ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் உள்ளன.

இங்கு கால்நடை மருத்துவர் தகுதியிலான ஒரு இயக்குநர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 17 ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். எனினும், கடந்த ஓராண்டுக்கு மேலாக இயக்குநர் பணியிடம் காலியாகவே உள்ளது.

இந்தப் பூங்காவுக்கு வார விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களின்போது அதிக அளவில் பொதுமக்கள் குவிகின்றனர். பெரும்பாலானோர் குடும்பம் குடும்பமாக இங்கு வந்து, இங்குள்ள விலங்குகள், பறவைகளைக் கண்டுமகிழ்கின்றனர்.

இயற்கை எழில்சூழ்ந்த இப்பகுதியையும், விலங்குகள் மற்றும் பறவைகளையும் தங்களது குழந்தைகளுக்கு காண்பிப்பதற்காக, ஏராளமானோர் தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வருகின்றனர். பாடங்களில் படித்த, டிவி, சினிமாக்களில் பார்த்த விலங்குகள், பறவைகளை நேரில் பார்க்கும்போது குழந்தைகள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

எனினும், அதிக கூட்டம் இருக்கும்போது, நெருக்கடி இருப்பதால் விலங்குகள், பறவைகளைக் காண்பதில் சிறுவர், சிறுமியருக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. சில சமயங்களில் ஒருவர் மீது ஒருவர் உரசிக்கொண்டு செல்லும் அளவுக்கு கூட்டம் உள்ளது. மேலும், அதிக கூட்டம் கூடும்போது, மக்களைக் கட்டுப்படுத்த உயிரியல் பூங்கா பணியாளர்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இந்த உயிரியல் பூங்காவை விரிவாக்கம் செய்வது அவசியம் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இயற்கை மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் கூறியது: ஓய்வுநேரத்தை பயனுள்ள முறையில் கழிக்கவும், இயற்கை ரசிக்கவும், விலங்குகள், பறவைகளைக் கண்டுகளிக்கவும் இந்த உயிரியல் பூங்கா பெரிதும் உதவியாக உள்ளது. குறிப்பாக, எங்கள் குழந்தைகளுக்கு இந்தப் பூங்கா பெரிதும் குதூகலம் அளிக்கிறது.

எனினும், வார விடுமுறை நாட்களில்தான் குடும்பத்துடன் இங்கு வர முடிகிறது. ஆனால், அன்று அதிக அளவில் கூட்டம் இருப்பதால், பூங்காவில் நெருக்கடி நிலவுகிறது.

எனினும், வார விடுமுறை நாட்களில்தான் குடும்பத்துடன் இங்கு வர முடிகிறது. ஆனால், அன்று அதிக அளவில் கூட்டம் இருப்பதால், பூங்காவில் நெருக்கடி நிலவுகிறது.

இதனால் நிம்மதியாக விலங்குகள், பறவைகளைப் பார்க்க முடிவதில்லை. அதுமட்டுமல்ல, பூங்காவை விரிவுபடுத்தினால்தான் ஓரளவுக்கு பெரிய மிருகங்களையாவது இங்கு கொண்டுவருவார்கள். அப்போது, மக்கள் இன்னும் மகிழ்ச்சியடைவர்.

இந்த உயிரியல் பூங்காவுக்கு அருகில், கோவை மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்கா உள்ளது. ஏறத்தாழ 5 ஏக்கர் கொண்ட அந்தப் பூங்கா, உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை. மேலும், பெரிய அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால், மக்களை பெரிதும் ஈர்ப்பதில்லை.

எனவே, மாநகராட்சி பூங்காவை இந்த உயிரியல் பூங்காவோடு இணைத்தால், பெரிய அளவிலான பூங்கா அமையும். அப்போது நெருக்கடியும் குறையும் என்றனர்.

சிறுத்தையை கொண்டுவரலாம்

இது தொடர்பாக பூங்கா ஊழியர்கள் தரப்பில் கூறும்போது, “சிங்கம், புலி போன்ற விலங்குகளை கொண்டுவர வேண்டுமெனில், குறைந்தபட்சம் 25 ஏக்கர் பரப்பாவது தேவை. எனினும், உயிரியல் பூங்காவுடன், அருகில் உள்ள பூங்காவை இணைத்தால் 10 ஏக்கர் பரப்பிலான பூங்காவாக அமையும்.

அப்போது, சிறுத்தை உள்ளிட்ட சிறு விலங்குகளை இங்கு வைக்கமுடியும். மேலும், இடநெருக்கடியும் குறையும். இப்போது உயிரியல் பூங்காவைப் பராமரிக்க போதுமான அளவு பணியாளர்கள் உள்ளனர். பூங்காவை விரிவுபடுத்தி, பொலிவுபடுத்தும்போது, கூடுதல் எண்ணிக்கையிலான பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தண்ணீர், மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட எவ்விதப் பிரச்சினைகளும் இல்லை.

காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இந்தப் பூங்கா மிக அருகில் உள்ளதால், இன்னும் கூடுதலான சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். எனவே, பூங்காவை பொலிவுபடுத்த வேண்டியது அவசியம்” என்றனர்.

கைவிடப்பட்ட திட்டம்

கோவை நகரின் மையப் பகுதியில் உள்ள இந்தப் பூங்கா 4.35 ஏக்கர் பரப்பில் மட்டுமே அமைந்துள்ளது. இதனால், இந்தப் பூங்காவை விரிவாக்கம் செய்வது சிரமம் என்பதால், புறநகர்ப் பகுதிக்கு கொண்டுசெல்ல முன்பு திட்டமிட்டனர். இதற்காக, மதுக்கரை அருகேயுள்ள எட்டிமடை பகுதியில் உயிரியல் பூங்காவுக்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. எனினும், என்ன காரணத்தினாலோ அந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை.

கோவை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. உயிரியல் பூங்காவின் முகப்பு.

உயிரியல் பூங்காவின் அருகில் உள்ள மாநகராட்சிப் பூங்கா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x