Published : 16 Aug 2022 07:07 AM
Last Updated : 16 Aug 2022 07:07 AM
சென்னை: சென்னை துறைமுகத்தில் மீன்பிடிதளம் ரூ.99 கோடியில் நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது என, மத்திய கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்தார்.
மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், சென்னைத் துறைமுகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்ததோடு, சில திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இதன்படி, துறைமுகத்தின் 2-ஏ நுழைவு வாயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிய கன்டெய்னர் ஸ்கேனர் வசதியை தொடங்கி வைத்தார்.
இதேபோல், துறைமுகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.10.62 லட்சம் செலவில் 20 மீட்டர் உயரம் கொண்ட தேசியக் கொடி கம்பம் அமைப்பதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர், அமைச்சர் சர்பானந்தா சோனோவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாகர்மாலா திட்டத்தின் கீழ்,நாட்டில் உள்ள முக்கிய துறைமுகங்கள் மேம்படுத்துதல், சரக்குகளை எளிதாக கையாளும் வகையில் வசதிகள் ஏற்படுத்துதல், நீர்வழிப் போக்குவரத்தை எளிதாக்குதல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்படுகின்றன.
நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்துவது போன்று கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னை, பாரதீப், விசாகப்பட்டினம் ஆகிய துறைமுகங்களில் மீன்பிடி தளங்கள் நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. சென்னை துறைமுகத்தில் இப்பணியை மேற்கொள்ள ரூ.99 கோடி நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் ஆவதையொட்டி,நாடு முழுவதும் உள்ள 75 கடற்கரைகள் தூய்மைப்படுத்தப்படும். இதில், சென்னை மெரினா, எலியட்ஸ் மற்றும் திருவான்மியூர் கடற்கரையும் அடங்கும். இவ்வாறு அமைச்சர் சர்பானாந்தா சோனோவால் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய கப்பல்,துறைமுகங்கள், நீர்வழித் துறைஇணையமைச்சர் ஸ்ரீபத் நாயக்,சென்னை துறைமுக தலைவர் சுனில்பாலிவால், துணைத் தலைவர் எஸ். பாலாஜி அருண்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT