Published : 10 Oct 2016 09:42 AM
Last Updated : 10 Oct 2016 09:42 AM
சென்னையில் இருந்து சோழிங்க நல்லூர், கோவளம், மாமல்லபுரம் வழியாக புதுச்சேரிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக ரயில் பாதை அமைக்கும் பணிக்கு கடந்த 2007-ம் ஆண்டு ரயில்வே துறை ஒப்புதல் அளித்தது. சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக கடலூர் வரை 179.2 கி.மீ. தூரத்துக்கு ரயில்பாதை அமைக்க ரூ.523 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
இந்த புதிய ரயில்பாதைக்கான சர்வே குறித்து ஆராய்வதற்காக கடந்த 2011-ம் ஆண்டில் 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சர்வே பணிகள் நடந்தும் அதில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதுவரை இன்னும் ரயில்வே பாதைக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் கூட நடைபெறவில்லை.
இத்திட்டம் நிறைவேறினால் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். மேலும் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக தென்மாவட்டங்களுக்கும் இணைப்பு கிடைக்கும். மாமல்லபுரம், கல்பாக்கம், கோவளம், புதுச்சேரி என முக்கிய பகுதிகளை இணைக்கும் இந்த ரயில் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.நேரு கூறும்போது, ‘கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் உள்ளன. தற்போது செய்யூர் அனல்மின் நிலையமும் வர உள்ளது.
புதுச்சேரியும் சுற்றுலாத் தலமாக உள்ளதால் இப்பகுதி வழியாக ரயில்பாதை அமைப்பது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில் விவசாய விளைபொருள்கள், உரம் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதற்கும் ரயில் வழி போக்குவரத்து பயனுள்ளதாக இருக்கும். இது ஆய்வுப் பணிகளுடன் உள்ளது. விரைவில் இத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும்’ என்றார்.
இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறும்போது, ‘இந்த ரயில்பாதை அமைப்பது தொடர்பாக ஆய்வுப் பணிகள் நடைபெற்றுள்ளன. மத்திய அரசு சார்பில் 50 சதவீதம் நிதியும், இதனால் பயனடையும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகள் சார்பில் 50 சதவீதம் நிதியும் செலவு செய்து திட்டத்தை நிறைவேற்றலாம் என்ற வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த ரயில் பாதையின் முக்கியத்துவம் குறித்தும், மாநில அரசுகளுடன் இணைந்தோ, மத்திய ரயில்வே துறை தனியாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் உயரதிகாரி களுக்கு தெரிவித்துள்ளோம்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT