Published : 15 Aug 2022 04:20 PM
Last Updated : 15 Aug 2022 04:20 PM
சென்னை: " நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது. ஏற்கெனவே ஒரு கட்சி, ஒரு மதத்தை அவர்களது சொத்து போல் இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை" என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரீஸ்வரர் கோயிலில் தமிழக அரசு சார்பில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.
பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " இந்தியாவை சுற்றியிருக்கின்ற பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகியவற்றைப் பார்த்தால், அந்த நாடுகளைவிட இந்தியாவின் ஜனநாயகம் கடந்த 75 ஆண்டுகளாக சக்திவாய்ந்த ஜனநாயகமாக இருந்துள்ளது.
அதற்கு மூலக்காரணம், தேசப்பற்றையும் அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. ராணுவத்தையும், அரசியலையும் பிரித்து வைத்திருப்பது. இதுதான் இந்திய ஜனநாயகத்தின் 75 ஆண்டுகால வரலாறு.
நாகரிகம் உள்ள அரசியல்வாதிகள், தேசப்பற்றையோ, ராணுவத்தையோ அரசியல் கட்சிக்காக ஒருபுறம் இழுக்கவே கூடாது. ஏற்கெனவே ஒரு கட்சி, ஒரு மதத்தை அவர்களது சொத்து போல் இழுத்தது போன்று நாட்டையும், ராணுவத்தையும் அவர்களுடைய சொத்துபோல் இழுப்பது, நாட்டிற்கு நல்லது இல்லை" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT