Published : 15 Aug 2022 03:34 PM
Last Updated : 15 Aug 2022 03:34 PM
புதுச்சேரி: மகான் அரவிந்தரின் 150வது பிறந்தநாளையொட்டி பக்தர்கள் தரிசனத்துக்கு அறை திறக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர், ஆரோவில்லில் போன்ஃபயர் எனப்படும் தீமூட்டி தியானத்தில் இன்று அதிகாலை ஈடுபட்டனர்
கடந்த 1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் அரபிந்த கோஷ். இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலைக்கு பின்னர் புதுவைக்கு வந்து ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவரின் ஆன்மீகத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் ஆசிரமம் அமைத்து மகான் ஸ்ரீ அரவிந்தர் என அழைத்தனர். அரவிந்தர் 1950ம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி 78 வயதில் மறைந்தார்.
அவரின் உடலை ஆசிரமத்தில் வைத்து சமாதி முன் மலர்களை வைத்து வழிபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் புதுவை நகரின் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறை பக்தர்களின் தரிசனம் செய்ய திறக்கப்படும். இன்று அரவிந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி அரவிந்தர் ஆசிரமம் காலை நான்கு மணிக்கு திறக்கப் பட்டு, ஆறு மணிக்கு தியான நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து பக்தர்கள் அரவிந்தர் பயன்படுத்திய அறையை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். மாலை ஆறு மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், அரவிந்தர் வசித்த அறைகளை பார்வையிட்டு தரிசித்தனர்.
ஆரோவில்லில் போன் பயர் (தீ மூட்டி தியானம்): அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்போன்சாவால், கடந்த 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் இரும்பை, இடையன்சாவடி, பொம்மையார்பாளையம்,
குயிலாப்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளின் மைய பகுதியில் ஆரோவில் என்னும் சர்வதேச நகரம் தோற்றுவிக்கப்பட்டது.
உலக மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்பது அரவிந்தரின் கனவு. அதனை ஆரோவில்லில் சர்வதேச நகரை உருவாக்கி செயல்படுத்தியவர் அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை மீர்ரா. அரவிந்தரின் பிறந்த நாளை யொட்டி ஆரோவில் சர்வதேச நகரில் உள்ளது மாத்ரி மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை 4:30 மணியிலிருந்து 6:30 மணி வரை போன் ஃபயர் எனப்படும் தீ மூட்டி கூட்டு தியானம் நிகழ்ச்சியும் நடந்தது.
இதில் வெளிநாட்டினர், ஆரோவில்வாசிகளும், பக்தர்களும் பங்கேற்றனர். இந்த போன் ஃபயரின்போது மாத்ரி மந்திர் தங்க நிறத்தில் ஜொலித்ததாக பக்தர்கள் குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT