Published : 15 Aug 2022 03:09 PM
Last Updated : 15 Aug 2022 03:09 PM

’ஓபிஎஸ் தவறை உணர்ந்து மாறிவிட்டார்; இபிஎஸ் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை’ - டிடிவி தினகரன்

சென்னை:" எடப்பாடி பழனிசாமி திருந்தினால் அவரோட சேர்வது குறித்து பார்ப்போம். ஆனால், எனக்கு தெரிந்தவரை அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. பதவி, ஆட்சி வெறியில் தனது குடும்ப உறுப்பினர்களுக்குக்கூட அவர் துரோகம் செய்யக்கூடியவர். அவருடன் இருக்கும் ஒரு 10 பேர், அவர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கின்ற காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், அமமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியது: "வருங்காலத்தில் இணைவதாக இருந்தால், ஓபிஎஸ்அல்லது இபிஎஸ் உங்களுடைய சாய்ஸ் எதுவென்று என்னிடம் கேட்டனர். நான் சொன்னேன், தேர்தல் கூட்டணி என்பது வேறு. ஒருவருடன் இணைவது என்பது வேறு. அதில் ஓ.பன்னீர்செல்வம், தனக்கு பதவியில்லை, பிடுங்கிவிட்டார்கள் என்ற கோபத்தில், பிரிந்துசென்று செயல்பட்டு அம்மாவின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார்.

அதன்பிறகு தவறை உணர்ந்து, ஒரு குடும்பத்தின் பிடியில் இந்த இயக்கம் இருக்கிறது என்று சொன்னதெல்லாம், தான் தவறாக சொல்லிவிட்டோம் என்பதை உணர்ந்தார். அதுபோல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு சசிகலாதான் காரணம் என்று பரப்பியவர்கள், எனக்கு அந்த சந்தேகம் இல்லை, மக்களுக்கு இருக்கிறது என்றெல்லாம் கூறியவர் தனது தவறை உணர்ந்து அதிலிருந்து மாறி வந்துவிட்டார்.

ஆனால், பழனிசாமி இன்னும் மாறவே இல்லை. மேலும் மேலும் துரோகங்களை செய்துகொண்டே இருக்கிறார். மேடையில் 4 கால் பிராணிபோல் தவழ்ந்து வந்து, முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கு துரோகம் செய்தார். அந்த ஆட்சி நிலைக்க பாடுபட்ட நமக்கெல்லாம் துரோகம் செய்தார். அவர் தவறான வழியில் செல்கிறார், அவர் முதல்வராக தொடரக்கூடாது என்று ஆளுநரிடம் மனு கொடுத்த 18 எம்எல்ஏக்களுக்கு துரோகம் செய்தார். அந்த ஆட்சி போய்விடுமோ என்ற நேரத்தில் மீண்டும் வந்து கைகொடுத்த பன்னீர்செல்வத்துக்கு துரோகம் செய்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக 2017 செப்டம்ப்ர 12-இல் பொதுச்செயலாளர் என்ற பதவி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டும்தான். அதனால் அந்த பதவிக்கு யாரும் வரக்கூடாது என்று இதுபோன்ற பொதுக்குழுவில் முடிவு செய்துவிட்டு, இன்றைக்கு ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்கிற விதமாக தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி, நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தது அனைவருக்கும் தெரியும்.

ஒற்றைத் தலைமை வேண்டும் என்றால், அது பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இருக்க வேண்டுமா? வேறு ஏதாவது பதவிகளில் இருக்கலாம் அல்லவா. பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்குதான் என்றுகூறி அன்று பதவிக்கு வந்தவர், பன்னீர்செல்வத்தை ஏமாற்றிவிட்டு, அதுதான் மெஜாரிட்டி ஏன் 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்களே, தேர்தல் வைத்து நீங்கள் தலைமை பதவிக்கு வந்திருக்கலாமே, மறைந்த தலைவர் ஜெயலலிதாவை தவிர யாருக்கும் பொதுச்செயலாளர் பதவி என்று கூறிவிட்டு தற்போது அவருக்கும் துரோகம் செய்து வருகிறார்.

எனவே அவர் திருந்தினால் பார்ப்போம். ஒருவேளை திருந்தினால் அவரோட சேர்வது குறித்து பார்ப்போம். ஆனால், எனக்கு தெரிந்தவரை அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்குக்கூட, பதவி வெறியிலே, ஆட்சி வெறியிலே துரோகம் செய்யக்கூடியவர். தனிமனித வெறுப்பு எனக்கு யார் மீது கிடையாது. அவருடன் இருக்கும் ஒரு 10 பேர், அவர்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளுக்கு தண்டனை அனுபவிக்கின்ற காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x