Published : 15 Aug 2022 01:45 PM
Last Updated : 15 Aug 2022 01:45 PM
சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கிக்குச் சொந்தமான நகை அடமான நிறுவனக் கொள்ளை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 6 முதல் 7 நண்பர்கள் வரை இந்த கொள்ளைச் சம்பவத்தை திட்டமிட்டு செய்துள்ளனர் என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தற்போது 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வங்கி நிர்வாகத்தினரும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை அடையாளம் கண்டு உறுதி செய்துள்ளனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 3 பேரை கைது செய்துவிட்டோம். முக்கியக் குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டோம். அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதுதவிர மேலும் 3 பேரை தேடி வருகிறோம். மிகக் குறுகிய காலத்தில், போலீஸார் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துள்ளனர். ஓரிரு நாளில் அனைத்து நகைகளும் மீட்கப்படும்.
கொள்ளைச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளைச் சம்பவம் நடந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடிக்க நேர்த்தியாகத் திட்டமிட்டுள்ளனர். கொள்ளையடித்த பின்னர், என்ன செய்வது என்பதில் தான் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ள விசாரணைக்குப்பிறகு அவர்களது திட்டம் என்பது குறித்து தெரியவரும்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் 3 பேர் கொள்ளை நடந்த வங்கியில் இருந்துள்ளனர். மேலும் 4 பேர் வெளியில் இருந்துள்ளனர். மொத்தமாக 6 முதல் 7 பேர் வரை இந்தக் கொள்ளையில் திட்டமிட்டு ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொள்ளையில் ஈடுபட்ட அனைவரும் ஒரே பள்ளியில் படித்துள்ளனர். இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட யார் மீதும் பெரிய அளவிலான குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. ஊடகங்களில் வந்ததுபோல், துப்பாக்கி முனையில் கொள்ளை எல்லாம் நடக்கவில்லை. கொள்ளையர்கள் கத்தி வைத்துள்ளனர். ஆனால், அதையும்கூட அவர்கள் பயன்படுத்தவில்லை" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT