Published : 15 Aug 2022 07:03 AM
Last Updated : 15 Aug 2022 07:03 AM

தமிழகத்தின் தினசரி மொத்த மின் நுகர்வில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை 80% பங்களிப்பு: இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்

கோவை: தமிழகத்தின் தினசரி மொத்த மின் நுகர்வில் காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையம் உள்ளிட்ட 'புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' உற்பத்தித்துறை 80 சதவீதம் பங்களிப்பு அளிக்கிறது.

அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின்நிலையம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் காரணமாகவே மத்திய, மாநில அரசுகள் இத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் தற்போது காற்று சீசன் தொடங்கியுள்ள நிலையில் காற்றாலைகள் மூலம் தினசரி 90 மில்லியன் யூனிட் முதல் 120மில்லியன் யூனிட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

ஆடி மாதத்தில் காற்று மட்டுமின்றி மழையும் பெய்து வருவதால் தமிழகத்தின் மொத்த மின் நுகர்வில் ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' உற்பத்தி துறையின் கீழ் உள்ள காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையங்கள் மூலம் மிக அதிக மின்சாரம் தினமும் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தமிழகத்தின் தினசரிமொத்த மின் நுகர்வில் ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' உற்பத்தித் துறை80 சதவீதம் பங்களித்து வருவதாகவும்இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துஉள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது: உலகில் வாழும் மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்துஉயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் ஆற்றல் உற்பத்தி செய்ய காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையம் உள்ளிட்ட ‘புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' உற்பத்தி துறை உதவி வருகிறது.

தமிழகத்தில் 8,600 மெகாவாட்மின் உற்பத்தி செய்யும் வகையில்காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுஉள்ளது. தமிழகத்தில் வழக்கமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி அக்டோபர் வரை காற்று சீசன் இருப்பது வழக்கம். ஆனால், நடப்பாண்டு வழக்கத்தைவிட ஒருமாதத்துக்கு முன்னரே கடந்த மார்ச்15-ல் காற்றாலை மின் உற்பத்திக்கான சீசன் தொடங்கியது.

கஸ்தூரி ரங்கையன்

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் காற்று வீசினாலும், ஆடி மாதத்தில் மிகஅதிகமாக காற்று வீசுவது வழக்கம். தற்போது தினமும் சராசரியாக 90 மில்லியன் யூனிட் முதல் 120 மில்லியன் யூனிட் வரை மின்சாரம், காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த மின் நுகர்வில் 42 சதவீதத்துக்கு காற்றாலைகள் பங்களிப்பு செய்து வருகின்றன. தற்போது ஆடி மாதத்தில் காற்று மட்டுமின்றி மழையும் பெய்துவருவதால் தமிழகத்தின் தினசரி மொத்த மின் நுகர்வு 260 முதல் 290 மில்லியன் யூனிட் வரை உள்ளது.

இதில் 80 சதவீதம் காற்றாலை, சூரிய ஒளி, நீர் மின் நிலையம் உள்ளிட்ட 'புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' உற்பத்தி துறை பங்களித்து வருகிறது. இந்த மாதம் மட்டுமே இந்த அளவுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறை மொத்த மின் நுகர்வில் பங்களிப்பு செய்யும் என்றாலும்,

எதிர்வரும் ஆண்டுகளிலும் அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் 'புதுப்பிக்கத்தக்க ஆற்றல்' உற்பத்தி துறை மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு கஸ்தூரி ரங்கையன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x