Published : 14 Aug 2022 06:27 PM
Last Updated : 14 Aug 2022 06:27 PM

சென்னை தினம் - சமூக வலைதள ரீல்ஸ் போட்டிகளில் பங்கேற்க மக்களுக்கு மாநகராட்சி அழைப்பு 

சென்னை மாநகராட்சி

சென்னை: ஆகஸ்ட் 22ல் 'சென்னை தினம்' கொண்டாடப்படுவதை ஒட்டி சமூக வலைதள ரீல்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்க சென்னை மாநகராட்சி பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை தினத்தைக் கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி உங்களை அழைக்கிறது.

1639 ஆம் ஆண்டு மெட்ரசாக உருவான நம்முடைய சென்னை, சிங்கார சென்னையாக வளர்ந்து இன்று பிரம்மாண்ட பரிமாணத்தில் பல பகுதிகளைச் சார்ந்த மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டி, எல்லோருடைய மனதிலும் ஒரு உணர்வுபூர்வமான இடத்தை அடைந்திருக்கிறது.

நாம் பெருமையுடன் நேசிக்கும் நம் சென்னை பிறந்த தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதியை கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்காக ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டி மற்றும் குறும்பட போட்டி போன்ற போட்டிகளை நடத்தவுள்ளது.

ஓவியப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் தேசியக் கொடியை தலைப்பாக வைத்து உங்கள் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ஓவியங்களை வரைந்து அனுப்பலாம்.

புகைப்படப் போட்டியில் கலந்துகொள்பவர்கள் சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். சிறந்த புகைப்படங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்படும்.

சோசியல் மீடியா ரீல்ஸ் போட்டியில் கலந்துகொள்பவர்கள் சென்னையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற தலைப்பில் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் சோசியல் மீடியா ரீல்ஸ் இயக்கி அனுப்பலாம். சிறந்த ரீல்ஸ்க்கு பரிசு உண்டு. சிறந்த ரீல்ஸ் பெருநகர சென்னை மாநகராட்சி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்படும்.

குறும்பட போட்டியில் கலந்துகொள்பவர்கள் சென்னை என்ற தலைப்பில் குறும்படம் எடுத்து எங்களுக்கு அனுப்பலாம். சிறந்த குறும்படம் சென்னை தின வலைத்தளத்திலும் பெருநகர சென்னை மாநகராட்சி சமூக ஊடக பக்கங்களிலும் வெளியிடப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை அழகுப்படுத்தி மறுவடியமைப்பு செய்யும் வகையில் திட்ட வடிவமைப்புகளை தயார் செய்து பதிவேற்றம் செய்யலாம்.

சென்னை தினத்தை அனைவருக்கும் மறக்கமுடியாததாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்ற பெருநகர சென்னை மாநகராட்சி உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறது. உங்கள் உள்ளீடுகளை shorturl.at/dLU89 என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி அதில் உள்ள படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம்.

போட்டிகள் பற்றிய அறிவிப்புகளுக்கு, GCC Twitter, Instagram மற்றும் Facebook (@chennaicorp/ Greater Chennai Corporation) பக்கங்களை பின்தொடரலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.'' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x