Published : 14 Aug 2022 12:23 PM
Last Updated : 14 Aug 2022 12:23 PM

75-வது சுதந்திர தினம் | தலைவர்கள் வாழ்த்து

சென்னை: நாட்டின் 75-வது சுதந்திரன தினத்தை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ராமதாஸ்: "ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தது மற்றும் விடுதலை அல்ல. பொருளாதாரம், சமூகம் என எவையெல்லாம் மனிதர்களை அடிமைபடுத்துகின்றனவோ, அவை அனைத்திலும் சமநிலையை உருவாக்கி, அவற்றிலிருந்து மக்களுக்கு விடுதலை அளிப்பது தான் உண்மையான விடுதலை ஆகும்.

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த நாம், வறுமையிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும். அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை நிறைந்த சமத்துவ நாட்டை உருவாக்க கடுமையாக உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி: "1947 இல் சுதந்திரம் பெற்ற இந்தியா, இன்றைக்கு 75-வது ஆண்டு நிறைவு விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகிறது. அனைவரது இல்லங்களிலும் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதைப் பார்ப்பதில் பரவசம் ஏற்படுகிறது. இதன்மூலம், நாட்டு மக்களின் தேசபக்தி மேலோங்கி வருவது மனநிறைவை தருகிறது.

இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தோடு இந்தியா வளர்ச்சிப் பாதையில் பயணித்தால் தான் அனைத்து மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும். இத்தகைய சூழல் ஏற்படுவதற்கு விரைவில் தேசிய அளவில் அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளுக்கு நாட்டு மக்கள் ஆதரவு தர வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்: " இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மகத்தானது. பூலித்தேவன், மருது சகோதரர்கள், வீரமங்கை வேலுநாச்சியார், தீரன் சின்னமலை, வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, திருப்பூர் குமரன், தீரர் சத்தியமூர்த்தி, வாஞ்சிநாதன், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என எண்ணற்ற தலைவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்டு இருக்கிறார்கள்.

“வளமான வல்லரசு, பலமான நல்லரசு” என்று இந்தியாவை உருவாக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்னும் மகாகவி பாரதியாரின் பொன்மொழியைப் போற்றிப் பரப்பிடுவோம்; அனைவரும் உழைத்துப் பாரதம் பாரினில் சிறக்கப் பாடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்: "சுதந்திரம் என்பது ஒற்றை வார்த்தை அல்ல. அமைதி, வளம், சமத்துவம், வாழ்வுரிமை, சமூகநீதி, கவுரமான வாழ்க்கை உள்ளிட்ட மனித உரிமைகளின் ஒட்டுமொத்த தொகுப்பு தான் விடுதலை ஆகும். இத்தகைய சிறப்புமிக்க விடுதலையை இந்த நாடும், நாட்டு மக்களும் முழுமையான அனுபவிக்க வேண்டும் என்றால், போதை, மது, சூது ஆகிய மூன்று சமூகக் கேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்; அவை இல்லாத வளமான இந்தியாவை உருவாக்க இந்த விடுதலை நாளில் அனைத்து மக்களும் உறுதியேற்றுக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்: "ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கொடிக்க ரத்தம் சிந்திய அந்த மாவீரர்களை இந்த நன்னாளில் மனதார நினைத்து வணங்கிடுவோம்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முழுமையான விடுதலை உணர்வோடு வாழ்வதில்தான் உண்மையான சுதந்திரம் இருக்கிறது என்பதை சுதந்திர தின பவள விழா நாளில் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயம், சிறந்த கல்வி, சிறப்பான பொருளாதரமே தனி மனித சுதந்திரத்திற்கு முக்கியம். எனவே, அதனை நோக்கி திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டிய கடமை நம்முடைய அரசுகளுக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

சரத்குமார்: "வேற்றுமையில் ஒற்றுமை", மதச்சார்பின்மை ஆகிய தார்மீக கொள்கைகளை பிரதானமாக ஏற்ற இந்தியா, சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்திருப்பதை எண்ணி பார்க்கும்போது, பெரும் சவால்களை கடந்து, தன் சுய கட்டமைப்பால் உலகின் முன்னணி பொருளாதார நாடாக உயர்ந்திருப்பதற்கு ஒவ்வொரு குடிமக்களும் பெருமைகொள்ள வேண்டும்.

அதேசமயத்தில், இந்திய தேசத்தை வல்லரசு நாடாக மேலும் உயர்த்துவதற்கு நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வுடன் உறுதுணையாக செயல்பட வேண்டும் என இந்த இனிய சுதந்திர தினத்தில் அனைத்து இந்திய குடிமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x