Published : 14 Aug 2022 04:35 AM
Last Updated : 14 Aug 2022 04:35 AM
கிருஷ்ணகிரி பகுதியில் பெய்த தொடர் மழையால் தோட்டத்திலேயே அழுகி வீணான முள்ளங்கிகள், தற்போது விலை உயர்ந்தும் பலனில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 4735 ஏக்கரில் முள்ளங்கி சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை, தளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மற்றும் போச்சம்பள்ளி பகுதியில் விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். 45 நாட்களில் சாகுபடி செய்யப்படும் முள்ளங்கி விளைச்சலுக்கு வருகிறது.
ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விளையும் முள்ளங்கிகள், பெங்களூரு மற்றும் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி பகுதியில் விளையும் முள்ளங்கிகள், உள்ளுர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.
சாகுபடியில் ஆர்வம்
குறைந்த நாட்களில் ஓரளவுக்கு வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் அதிகளவில் முள்ளங்கி சாகுபடி செய்கின்றனர். அதன்படி, கிருஷ்ணகிரி அருகே வடுகம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிகழாண்டில், முள்ளங்கி விளைச்சல் அதிகரித்து, ஓரளவுக்கு விலை இருந்தாலும், தொடர்ந்து பெய்த மழையால் முள்ளங்கியை பறிக்க முடியாமல் தோட்டத்திலேயே அழுகி வீணாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வருவாய் இழப்பு
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ஒரு ஏக்கர் நிலத்தில் முள்ளங்கி பயிர் செய்தோம். இதற்காக நடவு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவானது. வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், கூலி ஆட்கள் மூலம் முள்ளங்கி அறுவடை செய்து, தூய்மைப்படுத்தி, 40 கிலோ எடை கொண்ட மூட்டையாக கட்டி சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
தற்போது 45 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த முள்ளங்கியை, தொடர்ந்து பெய்த மழையால் பறிக்க முடியவில்லை. மேலும், முள்ளங்கி நன்கு வளர்ச்சி அடைந்ததால், அதன் தரம் குறைந்துவிட்டது. இதனால் வியாபாரிகள் யாரும் வாங்க முன்வரவில்லை. அழுகி வீணான முள்ளங்கியை பறித்து தோட்டத்திலேயே விட்டுள்ளோம்.
மழைக்கு முன்பு ஒரு கிலோ முள்ளங்கி ரூ.20-க்கு விற்பனையானது. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் கிலோ ரூ.30-க்கு விற்பனையாகிறது. விலை உயர்ந்தாலும், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என வேதனை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT