Published : 13 Aug 2022 11:51 PM
Last Updated : 13 Aug 2022 11:51 PM
ஈரோடு: நடிகர் ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக ஒவ்வொரு முறையும் கூறி ஜகா வாங்குவது தான் அவரது வழக்கம் என முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோடு மரப்பாலம் நான்கு முனை சந்திப்பில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நான்காம் மண்டலம் சார்பில் 75-வது சுதந்திரதின பவள விழா மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எச்.எம். ஜாபர்சாதிக் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் அமைச்சர் மீது பாஜகவினர் செருப்பு வீசிய விவகாரத்தில் இருந்தே பாஜக என்றாலே என்ன அர்த்தம் என்பது அவர்கள் வீசிய பொருளிலிருந்து தெரிகிறது.
தமிழகத்தில் இன்னும் மின் கட்டணம் அதிகப்படுத்தப்படவில்லை. அதிகப்படுத்தப்படும் என சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் மத்திய அரசு தான். மோடி அரசு தான். தமிழக அரசை மின்சார கட்டணம் உயர்த்த வேண்டுமென கடந்த ஓராண்டாக வற்புறுத்தி வருகிறது. ஆனால் அவர்கள் எவ்வளவு உயர்த்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இது மக்களை பாதிக்காத வகையில் உயர்வு இருக்கும் என்று நினைக்கின்றேன்.
ரஜினிகாந்த் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசி இருப்பதாக சொல்கின்றார்கள். ஆனால் ரஜினியின் அடுத்த படத்திற்கு விளம்பரத்திற்கு தயாராகி வருவது தெரிய வந்துள்ளது. ரஜினியை பாஜகவினர் முன்னிலைப்படுத்துவதாக தகவல்கள் வந்திருக்கின்றன. அவர் அரசியலுக்கு வந்தால் தானே முன்னிலைப்படுத்த வேண்டும். அவர் இருபது முப்பது வருடங்களாக ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் போதும் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கூறுகிறார். எம்ஜிஆர் ஆட்சியை தர போகின்றேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு ஜகா வாங்குவதுதான் அவரது வழக்கம். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியினர் 75-வது சுதந்திரதின விழா தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி திருச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT