Published : 13 Aug 2022 09:46 PM
Last Updated : 13 Aug 2022 09:46 PM
கள்ளக்குறிச்சி: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளும்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிப்பதால், சின்னசேலம் விவகாரம் குறித்து திருமாவளவன் பேசமாட்டார் என சமூக வலைதளங்களில், சிலர் பணப்பயன்களுக்காக பேசி வருகின்றனர்” என்று திருமாவளவன் பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியமூர் தனியார் பள்ளி மாணவி ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் இன்று (ஆக.13) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசியது: “விடுதலை சிறுத்தைகள் சாதியின் அடிப்படையில் பார்க்காமல், நீதியின் அடிப்படையில் போராடக் கூடிய கட்சி. யாருக்கு பிரச்சினை என்றாலும் குரல் கொடுக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளும்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிப்பதால், சின்னசேலம் விவகாரம் குறித்து திருமாவளவன் பேசமாட்டார் என சமூக வலைதளங்களில், சிலர் பணப்பயன்களுக்காக பேசி வருகின்றனர். மாணவியின் உயிரிழப்புக்கு நீதிவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
பள்ளியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், மாணவி குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் காட்சி மட்டும் ஏன் வெளியாகவில்லை. மாணவியை கொலை செய்துவிட்டார்கள் எனக் கூறவில்லை, மாறாக சந்தேகத்தை தான் எழுப்புகிறோம். தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற முடிவு தெரியாமல் வழக்கு திசை மாறி கொண்டிருக்கிறது.
பள்ளியில் பயிலும் மாணவி இறக்க நேரிட்டால், இவர்கள் முறையாக என்ன செய்திருக்க வேண்டும். அவர்களது பெற்றோரிடம் தெளிவாக விளக்கியிருக்க வேண்டும் சந்தேகங்களை போக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. பள்ளி நிர்வாகத்திடம் வெளிப்படைத் தன்மை இல்லை.
பொய் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்து, மாணவியின் இறப்பில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மாணவி உயிரிழப்புச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. உயிரிழந்த மாணவியின் தாய்க்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சின்னசேலம் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கவேண்டும்
தனியார் கல்வி நிறுவனங்களை மாதந்தோறும் ஆய்வு செய்ய கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்காக நாங்கள் இங்கு திரண்டுள்ளோம். எனவே அரசு நீதி வழங்கவேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT