Published : 13 Aug 2022 05:37 PM
Last Updated : 13 Aug 2022 05:37 PM
மதுரை: மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன். காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு இன்று (ஆக.13) கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் லெட்சுமணன் உடலுக்கு தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வு முடித்து விமான நிலையத்தை விட்டு சென்ற அமைச்சர் கார் மீது அங்கிருந்த பாஜகவினர் திடீர் தாக்குதல் நடத்தினர். பெண் தொண்டர் ஒருவர் காலணியை எடுத்து அமைச்சர் காரின் மீது வீசினர். அந்தக் காலணி, காரின் முன் கண்ணாடியில் விழுந்தது. சிலர் காரை கைகளால் ஓங்கி தட்டினர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பாஜக சார்பில் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட பாஜக பொருளாளர் ஜி.ராஜ்குமார், மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை விமான நிலையத்தில் ராணுவ வீரர் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை மாநகர் தலைவர் சரவணன் ஆகியோரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் மரியாதைக்குறைவாக பேசியுள்ளார்.
அங்கிருந்த அதிகாரிகளிடம், ‘அஞ்சலி செலுத்த இவர்களுக்கு (பாஜக தலைவர்களுக்கு) என்ன தகுதியுள்ளது. இவர்களை யார் விமான நிலையத்துக்குள் விட்டது’ எனக் கேட்டுள்ளார். இதனை விமான நிலையத்துக்கு வெளியே நின்றிருந்த பாஜகவினர் தெரிந்து கொண்டனர். இதனால் அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி சென்ற அமைச்சரின் காரை நிறுத்தி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அமைச்சரின் கார் ஓட்டுநர், பாஜகவினர் மீது காரை ஏற்றுவது போல் சென்றுள்ளார். அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்திருந்த போலீஸாரும் பாஜகவினர் மீது தடியடி நடத்தியுள்ளனர்.
அமைச்சரின் தூண்டுதல் பேரில் திமுகவினரும், போலீஸாரும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜகவினர் பலர் காயமடைந்துள்ளனர். இதனால் அமைச்சர் மற்றும் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT