Published : 13 Aug 2022 05:14 PM
Last Updated : 13 Aug 2022 05:14 PM
காரைக்குடி: ‘‘நாடு முழுவதும் ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர் கல்வி அமைச்சர் எதற்கு? வீடு இல்லாதோர் எங்கு சென்று கொடியேற்றுவர்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், 5ஜி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் காட்டமாக கருத்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியது: “நம் நாட்டில் 75 ஆண்டுகள் சுதந்திரம் நிலைத் திருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் ஜவஹர்லால் நேரு. அனைத்திலும் ஒரே நாடு என்ற எண்ணம் தவறானது. இந்தியா ஒரே நாடு என்றாலும் பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாசாரங்கள் உள்ளன. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் இறங்க கூடாது. மாநில அரசு தன்னுடைய மக்களுக்காக நிறுவிய கல்லூரியில் யாரை சேர்க்கலாம் என்பதற்கான அதிகாரம் அந்த அரசுக்கு கிடையாதா? பொம்மை அரசாக மாநில அரசு இருக்க முடியுமா?
நாடு முழுவதும் ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர் கல்வி அமைச்சர் எதற்கு? மத்திய அரசே மத்திய பல்கலைக் கழகங்களை நிறுவுவது போன்று எல்லா கல்லூரிகளையும் நிறுவும் என்று அறிவிக்கலாமே. சுயமாக செயல்படத்தான் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
ஒரே நாடு, ஒரே கல்வி என்பதில் ஆரம்பித்து ஒரே கலாசாரம், ஒரே பழக்கவழக்கம், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்று போய் நிற்கும். இதே போக்கில் சென்றால் ஜனநாயகம், சர்வாதிகராமாக மாறிவிடும். இதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் கட்டாயம் தேசியக்கொடி வாங்க வேண்டும் என்று கூறுவது தவறு. வீடு இல்லாதோர் எங்கு சென்று கொடியேற்றுவர். கொடியை திணிக்கக் கூடாது. விரும்பி வாங்க வேண்டும். மேலும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டுமென ஒருபுறம் பிரசாரம் செய்கின்றனர். மற்றொருபுறம் பிளாஸ்டிக் கொடியை ஏற்றுங்கள் என்று சொல்கின்றனர்.
5 ஜி ஏலத்தில் பெரிய சரித்திரமே உள்ளது. தோண்டத் தோண்ட உண்மைகள் வெளியேவரும். ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போக வேண்டியது. ரூ.1.5 லட்சம் கோடிக்கு தான் போய் உள்ளது. இதில் யாருக்கு லாபம் என்பதை மக்கள் யோசிக்க வேண்டும்.
ரஜினி, ஆளுநர் சந்திப்பை தவறு என்று கூற முடியாது. அது ஒரு விவாதப் பொருளே கிடையாது. ஒரு குடிமகன் ஆளுநரை சந்திக்கலாம். மேலும், ஆளுநரை சந்தித்தால் ஏதாவது பேசித்தானே ஆக வேண்டும். அதில் அரசியல் பேசியிக்கலாம்.
வேலையின்மை மிகக் கொடுமையானது. அது அதிகரித்து கொண்டே செல்கிறது. இதை மற்ற நாடுகளுடன் ஒப்பிட முடியாது. கடன் சுமை, நிதி பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, பண வீக்கம் ஆகிய நான்கும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் உள்ளன. இந்த நான்கும் தான் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும். மத்திய அரசு இவற்றை நிர்வகிப்பதில் தோல்வி அடைந்துள்ளது. அதனால்தான் இந்த மோசமான வளர்ச்சி விகிதம், விலைவாசி உயர்வு.
ஆறு ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கின்றனர். அவர்கள் விற்கும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதே காங்கிரஸ்தான். அவர்களால் ஆக்க முடியாது. அழிக்கத்தான் முடியும்.
போதைப் பொருட்களுக்கும், மதுபானத்திற்கும் முடிச்சு போடக்கூடாது. போதை மருந்தால் அழிவுப் பாதையில் இளைய சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும். மதுவை விற்க வேண்டுமா, விலக்கு வேண்டுமா என்பது பல ஆண்டுகளாக உள்ள பிரச்சினை. பூரண மதுவிலக்கு உள்ள குஜராத்தில்தான் எளிதாக மதுபானம் கிடைப்பதாக கூறுகின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் சுவிஸ் வங்கியில் இருப்பது கருப்பு பணம். பாஜக ஆட்சிக்கு வந்தால் அது முதலீடாக மாறிவிடுகிறது. பணமதிப்பிழப்பின்போது இனிமேல் கருப்பு பணமே இருக்காது என்றனர். ஆனால் தினந்தோறும் வருமான வரித்துறை, அமலாக்க துறையினர் கோடி, கோடியாக பறிமுதல் செய்கின்றனர் வெள்ளை பணம் கருப்பாக மாறியதா அல்லது அச்சிடும்போதோ கருப்பாக மாறியதா? ஒரு வேளை ரிசர்வ் வங்கி தொழிற்சாலைகளில் நல்ல பணத்தையும், கருப்பு பணத்தையும் சேர்த்து அச்சிடுகிறார்களா?
சிஏஜி அறிக்கையில் ஒன்றிரண்டு மட்டுமே வெளியிடுகின்றனர். பல அறிக்கைகளை அரசு வெளியிடுவது கிடையாது. பணவீக்கம் புள்ளியியல் துறை அறிக்கையின்படி 7 சதவீதம். அது புதுடெல்லியில் உள்ள புள்ளியியல் அலுவலகத்திற்கு மட்டும் தான். கீழே உள்ள மக்களிடம் வரும்போது அது 8, 9 என கடைசியில் 10-ஆக மாறுகிறது. குக்கிராமங்களுக்கு செல்லும்போது அது மேலும் அதிகமாக உள்ளது. அதன் விளைவு சராசரி குடும்பம் தன் நுகர்வை குறைத்து கொள்கிறது. இதனால் உட்கொள்ளும் உணவு அளவு, தரம் குறைந்து விடுகிறது. குழந்தைகளின் வளர்ச்சியும் குன்றி விடும். இதை பாஜவால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT