Published : 13 Aug 2022 07:01 AM
Last Updated : 13 Aug 2022 07:01 AM
கோவை: கோவை மாநகரில் மேம்பாலத் தூண்கள் உட்பட பல்வேறு பொது இடங்களில் அனுமதி மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இதனால் விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
கோவை அவிநாசி சாலையில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 300-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நஞ்சப்பா சாலை, காந்திபுரம் நூறடி சாலையில் உயர்மட்டப் பாலங்கள் கட்டப்பட்டு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், மேம்பாலங்களின் தூண்களை பல்வேறு அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்து, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் ஆளுயர சுவரொட்டிகள் ஒட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக சமூக செயல்பாட் டாளர்கள் கூறியதாவது: மாநகராட்சி அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைக்கவும், சுவரொட்டிகள் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைமீறி மாநகரில் பொது இடங்கள், கட்டப்படும் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலங்களின் தூண்கள், அரசு அலுவலக சுவர்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
குறிப்பாக, அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் தூண்களில் 4 பக்கங்களிலும், ஆள் உயரத்துக்கு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதேபோல, உக்கடம், காந்திபுரம் நூறடி சாலை, ஆவாரம்பாளையம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இதே நிலைதான் உள்ளது.
சுவரொட்டிகளால் வாகன ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தூண்கள், பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க பயனுள்ள ஓவியங்கள் வரைதல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும், எந்த பயனுமில்லை.
தடையை மீறி சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள் மீது மாநகராட்சி, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
விரைவில் ஆக் ஷன் பிளான்
மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, ‘‘அவிநாசி சாலையில் முதல்வர் வருகையை ஒட்டி சுவரொட்டிகள் ஒட்டப் பட்டுள்ள தாகவும், குறிப்பிட்ட நாட்களுக்குள் அவற்றை அகற்றிவிடுவதாகவும் தொடர்புடைய கட்சியினர் தெரிவித் துள்ளனர்.
இருப்பினும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையில், தாங்களாகவே முன்வந்து சுவரொட்டிகளை அகற்றிவிடுமாறு அறிவுறுத்தியுள்ளோம்.
இல்லை யெனில் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். சில தினங்களுக்கு முன்னர் பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, அனுமதி மீறி சுவரொட்டிகளை ஒட்டக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்,’’ என்றார்.
மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க ‘ஆன் பிளான்’ செயல் படுத்தப்பட உள்ளது. விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்,’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT