Published : 13 Aug 2022 04:49 AM
Last Updated : 13 Aug 2022 04:49 AM
சென்னை: அடுத்த ஓராண்டுக்குள் நாடு முழுவதும் 75 ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடி செலவில் அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த அதிவேக ரயிலுக்கு ‘வந்தே பாரத்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக, டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டு வரும் இந்த ரயிலுக்கு மிகப்பெரியவரவேற்பு கிடைத்த நிலையில், நாடுமுழுவதும் இந்த ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிக அளவில் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணிமேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 75 ரயில்களை இயக்கரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில், 2023 ஆகஸ்டுக்குள் நாடு முழுவதும் 75 ‘வந்தே பாரத்’ ரயில்களை இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கேற்ப, அனைத்து ரயில்வே மண்டலங்களில் உள்ளயார்டுகளிலும், தொழில்நுட்பம், கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் 50 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு, ஒன்றரை மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
‘வந்தே பாரத்’ ரயில் உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சொகுசான பயணம் மேற்கொள்ள வசதியாக, ஒவ்வொரு பெட்டியிலும் ஏர் ஸ்பிரிங் பொருத்தப்பட்டுள்ளது. தானியங்கி கதவுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன ரக கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி, அடுத்த 4 ஆண்டுகளுக்குள் மேலும் 400 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, ஐசிஎஃப் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், தலைமை மெக்கானிக்கல் பொறியாளர் சீனிவாசன், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா,சென்னை மண்டல ரயில்வே பொதுமேலாளர் கணேஷ், ஐசிஎஃப் முதன்மை எந்திரவியல் பொறியாளர் எஸ்.சீனிவாஸ், முதன்மை மின்னியல் பொறியாளர் டி.பி.தாஸ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.10 லட்சம் பரிசு
‘வந்தே பாரத்’ ரயில் பெட்டி தயாரிப்பில் ஈடுபட்ட ஐசிஎஃப் ஊழியர்களைப் பாராட்டியதோடு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
புதிதாக தயாராகிவரும் ‘வந்தே பாரத்’ ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும், மின்தடை ஏற்பட்டால் இயங்கும் வகையில் 4 அவசரகால விளக்குகள், நடைமேடை திசையில் முன்புறமும், பின்புறமும் கண்காணிக்க 4 கேமராக்கள், 4 அவசரகால வெளியேற்று ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைக்க ஏரோசால் அடிப்படையிலான தீ உணர்வு கருவி, ஒரே தடத்தில் ரயில்கள் வந்தால் மோதல்ஏற்படுவதை தடுக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான கவச் என்ற ரயில் பாதுகாப்பு கண்காணிப்பு வசதி உள் ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசியக் கொடி பேரணி
ஐசிஎஃப் தொழிற்சாலையைப் பார்வையிட்டபின், திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்தில், தேசியக் கொடி பேரணியை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்ததோடு, தேசியக் கொடியையும் ஏற்றினார்.
மேலும், பாரதியாரின் 5-ம் தலைமுறை வாரிசான நிரஞ்சன் பாரதி, 99-ம் வயதாகும் விடுதலைப் போராட்ட வீரர் கருப்பையா உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவித்தார். மேலும், மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்று பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பாரதியார் ஆற்றிய பங்கு அளப்பறியது. குறிப்பாக தனது கவிதைகள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மனதில் நாட்டுப்பற்றை ஏற்படுத்தினார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT