Published : 13 Aug 2022 04:42 AM
Last Updated : 13 Aug 2022 04:42 AM

வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்ப்பு | நாமக்கல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை முழு விவரம்

நாமக்கல் அசோக் நகரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை மேற்கொண்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரின் வீடு.

நாமக்கல்: நாமக்கல் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை மேற்கொண்டனர். வருமானத்துக்கு அதிகமாக 315 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக எழுந்த புகாரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக கடந்த 2011 முதல் 2021 வரை பதவி வகித்தவர் கே.பி.பி.பாஸ்கர். தற்போது நாமக்கல் நகர அதிமுக செயலாளராக உள்ளார். பாஸ்கருக்கு சொந்தமான வீடு, மோகனூர் சாலை அசோக் நகரில் உள்ளது. இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், எம்எல்ஏவாக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்கள் உட்பட மொத்தம் 30 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 80 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நடந்தது.

பாஸ்கர் வீட்டில் சோதனை நடக்கும் தகவலை அறிந்ததும் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரது வீட்டின் முன்பு திரண்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

திருப்பூரில் சோதனை

திருப்பூர் மாநகராட்சி பென்னி காம்பவுண்ட் பகுதியில் பாஸ்கரின் உறவினரான ஹரி என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. அங்கும் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். கட்டுமான நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள், ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்பகுதியில் திருப்பூர் வடக்கு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

திமுக ஆட்சி அமைந்த பிறகு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, வீரமணி உள்ளிட்ட சிலர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்குகள் தொடர்பாக அவர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து, சோதனை மேற்கொண்டுள்ளது அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர், தனது பெயரிலும் தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக பாஸ்கர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகள், 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கண்டறியப்பட்டன. இதில் வழக்குக்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900 மற்றும் 214 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்ந்து நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x