Published : 13 Aug 2022 07:34 AM
Last Updated : 13 Aug 2022 07:34 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துகள் நடக்கும் தொப்பூர் கணவாய் பகுதி சாலையின் மறுசீரமைப்புப் பணியை விரைவுபடுத்தக் கோரி தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமைப் பொதுமேலாளரிடம் தருமபுரி மக்களவை உறுப்பினர் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக தேசிய நெடுஞ்சாலை (என்.எச்-44) அமைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பகுதி மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலம் ஆகியவற்றை இந்தியாவின் பிற மாநிலங்களுடன் இணைக்கும் பிரதான சாலையாக இந்த சாலை உள்ளது. இதில் தொப்பூர் கணவாய் பகுதி சாலை வனப்பகுதியின் மையத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ளது.
ஆபத்தான வளைவுகளையும், அதிக இறக்கம் மற்றும் ஏற்றம் கொண்ட நிலவியல் சாலையாகவும் உள்ளது. எனவே, இருசக்கர வாகனங்கள் தொடங்கி, கார்கள், சிறிய சரக்கு வாகனங்கள், பேருந்துகள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.
சவால் மிக்க சாலை
தருமபுரி-சேலம் மார்க்கத்தில் இறக்கம் மிக்க சாலையாக இருப்பதால் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சேலம்-தருமபுரி மார்க்கத்தில் மிகுந்த மேடான சாலையாக இருப்பதால் வாகனங்களில் ஏற்படும் வெப்பம் மற்றும் பழுது போன்ற காரணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.
இவ்வாறு ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளும், பொருட் சேதமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. சாலையின் கட்டமைப்பு நிலையே இந்த விபத்துகளுக்கு காரணம் எனவும், நவீன நுட்பங்களின் அடிப்படையிலான மறுசீரமைப்பால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும் என்றும் பொறியாளர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதற்கிடையில், தொப்பூர் கணவாயில் ஏற்படும் தொடர் விபத்துகள், பல குடும்பங்களின் நிம்மதியை நிரந்தரமாக பறித்து விடுவதால் இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
13 வாகனங்கள் மீது மோதல்
2 ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று தொப்பூர் கணவாய் இரட்டைப் பாலம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் பயணித்த 11 கார்கள், 1 சிறிய சரக்கு வாகனம் மற்றும் 1 இருசக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியது.
இதில் 5 பேர் உயிரிழந்தனர். பெரும் பொருள் சேதம் ஏற்பட்டது. இவ்வாறு வாரம்தோறும் சிறியதும், பெரியதுமாக தொப்பூர் கணவாயில் விபத்துகள் தொடர்ந்து கொண்டே உள்ளன.
மக்களவை உறுப்பினர் வலியுறுத்தல்
தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் இது தொடர்பாக தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகிறார். ஏற்கெனவே, இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பலமுறை கோரிக்கை கடிதமும் அளித்துள்ளார்.
அண்மையில், தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் தலைமைப் பொது மேலாளர்(தமிழ்நாடு பிரிவு) பிரசாந்த் ஜி.கோதாஸ்கரை நேரில் சந்தித்த மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், தொப்பூர் கணவாய்ப் பகுதி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அவசரத்தை உணர்த்தும் வகையில் வலியுறுத்தினார்.
இதுகுறித்து, எம்.பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, ‘தருமபுரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பணிகளை விரைவுபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நடக்கும் இடமாக தொப்பூர் கணவாய்ப் பகுதி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்குள்ள அபாயகரமான வளைவுகளை மக்கள் நலன் கருதி சீரமைக்க வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் அதற்கான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
தொப்பூர் கணவாய்ப் பகுதி சாலையை சீரமைக்க உயர்மட்ட பாலங்களுடன் கூடிய சாலை சீரமைப்பு, தற்போதுள்ள 4 வழிச் சாலையை 8 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்தல், சுரங்கப் பாதை அமைத்தல் என 3 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், தொப்பூர் கணவாய்ப் பகுதிக்கு பொருத்தமான திட்டத்தை இறுதி செய்து சாலை சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து உயிரிழப்புகளையும், பொருட் சேதங்களையும் தடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமை பொது மேலாளரிடம்(தமிழ்நாடு பிரிவு) வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் அடுத்த அகரம் கூட்ரோடு பகுதி, தருமபுரி அடுத்த குண்டலப்பட்டி பகுதி, தொப்பூர் அருகிலுள்ள பாளையம்புதூர் பகுதி ஆகிய 3 இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே, இப்பகுதிகளில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து தொடங்கிட தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT