Published : 12 Aug 2022 09:12 PM
Last Updated : 12 Aug 2022 09:12 PM

கைவிடப்படுகிறதா அலங்காநல்லூர் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்? - ஒப்பந்தப்புள்ளி ரத்தால் குழப்பம்

அலங்காநல்லூர் வாடிவாசல் | படம்: என்.தங்கரத்தினம்

மதுரை: அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கு அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஒப்பந்தப்புள்ளியை சுற்றுலாத் துறை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், உள்ளூர் பொதுமக்கள் எதிர்ப்பால் இந்தத் திட்டம் கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் உலக அளவில் பிரசித்திப்பெற்றவையாக கொண்டாடப்படுகிறது. இதில், தமிழகத்தில் உள்ள சிறந்த காளைகள் அலங்காநல்லூர் போட்டியில் பங்கேற்பதால் இந்த ஜல்லிக்கட்டுப்போட்டியை காண, உள்ளூர் மக்கள் மட்டுமில்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கக்கூடிய வாடிவாசல், பார்வையாளர் அமர்ந்து போட்டியை காணும் கேலரி அமைக்கப்படும் இடம் மிக குறுகலாக இருக்கிறது. அதனால், உலக புகழ் பெற்ற போட்டியாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டியை அனைவராலும் பார்க்க முடியவில்லை. தொலைகாட்சிகளில் மட்டுமே இந்த போட்டியை கண்டு ரசிக்க முடிகிறது.

போட்டி நடக்கும் நாளிற்கு முந்தைய நாள் இரவே பார்வையாளர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று இடம்பிடித்தால் மட்டுமே போட்டியை காண முடியும். அதனால், பெரும்பாலும் உள்ளூர் பார்வையாளர்களால் மட்டுமே போட்டியை பார்க்க முடிகிறது. வெளியூர் பார்வையாளர்களுக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதனால், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 65 ஏக்கரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைத்தும் அங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த தமிழக அரசு முடிவு செய்து இருக்கிறது.

இந்த பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து ஒப்பந்த புள்ளியையும் சுற்றுலாத்றை வெளியிட்டது. இந்த விளையாட்டு அரங்கம் அமைப்பதால் அலங்காநல்லூரில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு எந்த பாதிப்பும் வராது என்றும், அந்தகிராம மக்கள் விரும்பும் வரை அந்த ஜல்லிக்கட்டுப் போட்டி வழக்கம்போல் நடத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

அப்படியிருந்தும் கிராம மக்களில் ஒரு தரப்பினர், படிபடியாக இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு கீழக்கரையில் பிரமாண்ட அரங்கம் அமைத்தப் பிறகு மாற்றப்பட்டுவிடுமோ என்ற குழப்பத்திலும் உள்ளதால், அவர்கள் புதிய பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்த ஒப்பந்த புள்ளி ரத்து செய்யப்பட்டிருப்பது, இந்த திட்டம் நிரந்தரமாக கைவிடப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்குழு முன்னாள் நிர்வாகி சுந்தரராகவன் கூறுகையில், ‘‘பல நூறு ஆண்டுக்கு முன்பிருந்தே ஊர் மந்தையில் உள்ள காளியம்மன் முத்தாலம்மன் கோயிலில் சாமிகளை கும்பிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி பாரம்பரியமாக நடக்கிறது. இந்த போட்டியை எக்காரணம் கொண்டு வேறு இடத்திற்கு மாற்றவே கூடாது என்பதில் கிராம மக்கள் உறுதியாக இருக்கிறோம். அப்படி காலப்போக்கில் போட்டியை மாற்றினால் அது போட்டி உணர்வுபூர்வமாக இருக்காது. ஒரு காட்சிப்பொருளாகவே ஜல்லிக்கட்டுப்போட்டி அமைந்துவிடும்.

அதனால், பாரம்பரியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப்போட்டி இதுவரை எந்த இடத்தில் நடந்ததோ அதே இடத்தில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக அளவில் பிரபலப்படுத்த திட்டமிட்டிருந்தால் பாரம்பரிய ஜல்லிக்கட்டு முடிந்தப் பிறகு புதிதாக அமைக்கப்படும் ஜல்லிக்கட்டு அரங்கில் சிறப்பு ஜல்லிக்கட்டு வேண்டுமென்றால் நடத்திக் கொள்ளலாம்,’’ என்றார்.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் அரசு துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கும், இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் நடத்துவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. வழக்கம் போல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்கனவே நடந்த வாடிவாசலிலே நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. பிரமாண்ட ஜல்லிக்கட்ட அமைக்கும் திட்டம் கைவிடப்படவில்லை. இன்னும் கூடுதல் திட்டமதிப்பீடு தயார் செய்து அரங்கம் அமைக்கப்படும்’’என்றனர்.

அலங்காநல்லூர் வாடிவாசலின் சிறப்பு

அலங்காநல்லூர் மத்தியில் காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோயில்களுக்கு இடையே அமைந்துள்ள அலங்காநல்லூர் வாடிவாசல் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த வாடிவாசல், தமிழகத்தில் உள்ள பிற வாடிவாசல்களை காட்டிலும் குறுகலாக 'ட' வடிவில் அமைந்துள்ளதால் இந்த வாடிவாசல் முன்பு காளைகள் நீண்ட நேரம் நின்று விளையாடுவதற்கு வசதியாக உள்ளது. மற்ற வாடிவாசல்களில் பெரும்பாலும் அவிழ்த்துவிடப்படும் காளைகள் மாடுபிடி வீரர்களை பார்த்ததும் நின்று விளையாடாமல் ஓடிவிடும்.

ஆனால், அலங்காநல்லூரில் உள்ள வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும் காளைகள் வெளியேறாமல் மூலை வரையிலும் சென்று நின்று விளையாடும். அதனால், வீரர்களும் துடிப்போடு களமிறங்கி காளைகளின் திமில்களைப் பிடித்து விளையாடுவதற்கு ஏதுவான வாடிவாசலாக இந்த வாடிவாசல் கருதப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x