Published : 12 Aug 2022 03:24 PM
Last Updated : 12 Aug 2022 03:24 PM
சென்னை: "அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் வீட்டிலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது" என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர் வீட்டிலும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியில் 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வந்தவர் பாஸ்கர், இவர் நகர அதிமுக செயலாளராகவும் இருந்து வருகிறார். பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாகவும், இந்த வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315 சதவீதம் அதிகம் எனவும், இதையொட்டி நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கு சம்பந்தமாக பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மதுரை, திருப்பூர் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 26 இடங்களில் (நாமக்கல்-24, மதுரை-1, திருப்பூர்-1) லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் தங்கை வீடு, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சேகர் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களின் வீடுகளிலும் இந்த சோதணை நடைபெற்று வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT