Published : 12 Aug 2022 01:34 PM
Last Updated : 12 Aug 2022 01:34 PM
சென்னை: கிராம சபை கூட்டங்களில் வேளாண்மை துறை திட்டங்களில் பயன் அடைந்த பயனாளிகளின் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க உழவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையால் அனைத்து கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுகிறது.
இக்கிராம சபைக் கூட்டங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையைச் சார்ந்த வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை தொடர்பான பல்வேறு திட்டப் பலன்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும், தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தவும், பல்வேறு திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் பட்டியலை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பயிர்களில் உயர் மகசூல் பெற உதவும் முக்கியமான தொழில்நுட்பங்கள், துறையின் முக்கிய பணிகள் குறித்து கண்காட்சி நடத்தவும், பதாகைகள் வைக்கவும், கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு திட்டங்கள் பற்றிய துண்டுப்பிரசுரங்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, விவசாயிகள் பயன்படுத்துவது தொடர்பாகவும், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அனைத்து விவசாயிகளுக்கும் எடுத்துக்கூறப்படும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT