Published : 12 Aug 2022 05:07 AM
Last Updated : 12 Aug 2022 05:07 AM
சென்னை: குற்ற வழக்குகளில் குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க முக்கிய காரணியாக விளங்கும் அரசு தரப்பு சாட்சிகளை, மணிக் கணக்கில் நீதிமன்றங்களில் காத்திருக்க வைப்பதையும், அவர்களின் கண்ணியத்துக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் கேள்விகள் கேட்பதையும் தவிர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.
கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் குற்ற வழக்குகளில் சாட்சி விசாரணை என்பது மிகவும் முக்கியமானது. திறமையான அரசு வழக்கறிஞர்களின் வாதத்தால் பெரும்பாலான வழக்குகளில் குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் சாட்சிகள்.
பொதுவாக நீதிமன்றங்களில் கண்ணால் பார்த்த நேரடி சாட்சியம், மறைமுக சாட்சியம், சூழ்நிலை சாட்சியம், செவிவழி சாட்சியம், வாய்மொழி சாட்சியம், ஆவண சாட்சியம், அசல் சாட்சியம், உறுதிபடுத்தும் சாட்சியம், அடிப்படை ஆதார சாட்சியம், அனுமான சாட்சியம், முதல் நிலை சாட்சியம், இரண்டாம் நிலை சாட்சியம் என பல வகை உண்டு.
ஆனால் சமீபத்தில் ஒரு மைனர் பெண்மீதான கூட்டு பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்ற வழக்குகளின் புலன் விசாரணைக்கு சாட்சியம் அளிக்க பொதுமக்கள் யாரும் முன்வருவதில்லை என்றும், பொதுநலனில் அக்கறை கொண்ட வெகுசிலரே சாட்சியம் அளிக்க முன்வருகின்றனர் என்றும் வேதனை தெரிவித்திருந்தது.
உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து 100 சதவீதம் உண்மையானது. மனசாட்சிக்கு பயந்து நேர்மையுடன் சாட்சியம் அளிக்க வருபவர்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு போதிய பாதுகாப்பு உள்ளதா? நீதிமன்றங்களில் அவர்களின் கண்ணியம் காக்கப்படுகிறதா? என்றால் கேள்விக்குறியே மிஞ்சுகிறது.
பல நேரங்களில் நீதிமன்றக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிப்பதற்கே பல மணிநேரம் நீதிமன்ற வாயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் சாட்சிகளுக்கு ஏற்படுகிறது. அவ்வாறு சாட்சியம் அளித்தாலும் சாட்சிகளிடம் எதிர்தரப்பில் கேட்கப்படும் கேள்விகள் அநாகரீகமானவை. எரிச்சலூட்டக் கூடியவை. அதுவே பெண்கள் என்றால் கூச்சப்பட வைக்கக் கூடியவை.
குறுக்கு விசாரணைக்கு சட்டத்தில் இடம் உண்டு என்றாலும், அதற்கும் ஓர்எல்லை உண்டு என்பதை கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் அவ்வப்போது மறந்து விடுகின்றனர். இதனால் அன்றாட பணிச்சுமைகளுக்கு இடையே சாட்சியம் அளிக்க முன்வருபவர்கள் நீதிமன்றங்களில் நடைபெறும் கசப்பான அனுபவங்களால் சொல்ல முடியாத மனஉளைச்சலுக்கு ஆளாகி, ஆளைவிட்டால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுகின்றனர். இதனால் பல வழக்குகளில் சாட்சிகள் ‘பிறழ் சாட்சியம்’ அளிப்பதால் அது குற்றவாளிகளுக்கு சாதகமாகி விடுகிறது.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியதாவது:
பொதுவாக குற்ற வழக்குகளில் சாட்சிகளுக்கான பாதுகாப்பு என்பது சட்டரீதியாகவே உள்ளது. அதேநேரம் ஒவ்வொரு சாட்சிகளுக்குப் பின்னாலும் பாதுகாப்புக்கு ஒரு போலீஸ்காரரை அனுப்பி வைக்க முடியாது. சாட்சிகளை மிரட்டுவதாகத் தெரிந்தால் அதற்காகவும் போலீஸார் தனியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும்.
கீழமை நீதிமன்றங்களில் சாட்சியம் அளிக்க வருபவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப்படுகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது அந்த கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் கையில்தான் உள்ளது. அதேபோல கீழமை நீதிபதிகள் தங்களுக்கான அதிகாரம் என்ன என்பதையும் மறந்து விடுகின்றனர்.
சாட்சிகளிடம் எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும். எந்த மாதிரியான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்பதை நீதிபதியே முடிவு செய்யலாம். ஆனால் சிலநேரங்களில் உண்மையை வரவழைக்கக்கூடிய கேள்விகளைக் கூட நீதிபதிகள் கேட்பதில்லை.
இப்போது நவீன யுகத்தில் இருக்கிறோம். முன்புபோல இல்லை. ‘இன்-கேமராப்ரொசீடிங்ஸ்’ எனப்படும் தனிப்பட்ட விசாரணையானது நீதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களைத் தாண்டி வெளியே யாருக்கும் தெரியாது. அதுபோல குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள், பாலியல் பலாத்கார வழக்குகள், முக்கிய கொலை வழக்குகள், தீவிரவாத வழக்குகளில் சாட்சியம் அளிப்பவர்கள் குற்றவாளிகளுக்கு தெரியாமல் சாட்சியம் அளிக்க வழிவகை உள்ளது.
பட்டியலின வழக்குகளில் சாட்சிகள் அரசு தரப்பை மட்டும் சார்ந்திராமல், தங்களுக்கென பிரத்யேகமாக வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ள சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுவாக சாட்சியம் அளிப்பவர்களுக்கு பேட்டா வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்த தொகை சொற்பமானது என்பதால் அதை காத்திருந்து வாங்க யாரும் தயாராக இருப்பதில்லை. அதுபோல பாலியல் பலாத்கார வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் முன்வரலாறு குறித்தும் ஆராய வேண்டியதில்லை என்பதும் முக்கியமானது.
ஆனால் கண்ணால் பார்த்த குற்றத்தை சாட்சியம் அளிக்காமல் மறைப்பது அதைவிடக் குற்றம் என்பதை மறந்து விடக்கூடாது. சாட்சிகளிடம் வழக்கறிஞர்கள் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு பார் கவுன்சில் விதிகளும், சிஆர்பிசி, சிபிசிவிதிகளும் உள்ளன. ஆனால் இந்த சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய பொறுப்பும், கடமையும் அந்தந்த கீழமை நீதிமன்ற நீதிபதிகளிடமே உள்ளது. இவ்வாறு கே.சந்துரு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT