Published : 06 Jun 2014 09:02 AM
Last Updated : 06 Jun 2014 09:02 AM
தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் சாலை விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டுமே 366 பேர் இறந்துள்ளதாக அரசு புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வாகனங்களில் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து நெரிசல்களால் விபத்துகளும், அதில் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றன. கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே உயிரிழந்தார். அவர் சீட்பெல்ட் அணிந்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என்று கூறப்படுகிறது.
சாலை விபத்துகளுக்கு 60 சதவீதம் ஓட்டுநர்களின் கவனக்குறைவும், 30 சதவீதம் மிதமிஞ்சிய வேகமும்தான் காரணம், 10 சதவீதம் மட்டுமே இதர காரணங்களாக உள்ளன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 444 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில், இருசக்கர வாகனங்கள் மட்டும் ஒரு கோடியே 57 லட்சத்து 11 ஆயிரத்து 880 ஆகும். சென்னையில் மட்டும் 42 லட்சத்து 9 ஆயிரத்து 542 வாகனங்கள் ஓடுகின்றன. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 33,01,501 ஆகும். ஒவ்வொரு ஆண்டும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் அதிகரிக்கிறது. ஆனால், சாலைகளை விரிவுபடுத்துதலோ, மேம்படுத்தும் பணிகளோ 8 சதவீதம்கூட நடப்பதில்லை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 66,238 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 15,563 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 75,681 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் தமிழகம் முழுவதும் நடந்துள்ள 22,078 விபத்துகளில் 5,078 பேர் இறந்துள்ளனர், 25,374 பேர் காயமடைந்துள்ளனர் என்று அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவே முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றி நடக்க வலியுறுத்தி, ஆண்டுதோறும் ஜனவரியில் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் மேம்பாலம் கட்டுதல், சாலையை விரிவுபடுத்துதல், துணைச் சாலைகள் அமைத்தல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். 2012-ல் சாலை விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 16,175 ஆக இருந்தது. இது 2013-ல் 15,563 ஆக குறைந்துள்ளது. இதை மேலும் குறைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT