Published : 12 Aug 2022 06:57 AM
Last Updated : 12 Aug 2022 06:57 AM
கடலூர்: மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம், நெய்வேலி அனல் மின்நிலையங்களில் மட்டும் மின் உற்பத்தி செய்து வந்தது.
தற்போது இந்நிறுவனம், காற்றாலை மற்றும் சூரியஒளி போன்ற புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறை ஆகியவற்றில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி உள்ளது.
நெய்வேலி மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா,ஜார்க்கண்ட் மாநிலங்களிலும், அந்தமான் தீவுகளிலும் தனது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அசாமில் ரூ.5 ஆயிரத்து 500 கோடி செலவில், 1,000 மெகாவாட் நிறுவு திறன் கொண்ட சூரிய ஒளி மின்திட்டங்களை அமைக்க, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் அசாம் மின் விநியோக நிறுவனத்துடன் இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை தொடங்க உள்ளது.
இந்நிறுவனத்துக்கான மூலதனத்தில் 51 சதவீதத்தை என்எல்சி இந்தியா நிறுவனமும், எஞ்சிய 49 சதவீதத்தை, அசாம் மாநில மின் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான அம் மாநில மின்விநியோக நிறுவனமும் வழங்க உள்ளன.
இப்புதிய கூட்டு நிறுவனத்தைத் தொடங்குவதற்கான ஒப்பந்தம், அசாம் தலைநகர் திஸ்பூரில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மத்திய நாடாளுமன்ற விவகாரம், நிலக்கரி மற்றும் சுரங்கத் துறைகளுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் முன்னிலையில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் மோகன் ரெட்டி, அசாம் மின்விநியோக நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராகேஷ் குமார், சுரங்கத்துறை இயக்குநர் டாக்டர் சுரேஷ் சந்திரா சுமன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT