Last Updated : 12 Aug, 2022 04:20 AM

 

Published : 12 Aug 2022 04:20 AM
Last Updated : 12 Aug 2022 04:20 AM

தஞ்சாவூரில் 120 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள ஆங்கிலேயர்களின் சிறைச்சாலை நினைவு சின்னமாக அறிவிக்கப்படுமா?

தஞ்சாவூர்

தஞ்சாவூரின் மையப்பகுதியில் 120 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள, ஆங்கிலேயர் காலத்தில் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்த இடத்தை, நாட்டின் சுதந்திர தின பவள விழா கொண்டாப்படும் இக்கால கட்டத்தில், அதை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என் வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் சச்சிதானந்த மூப்பனார் சாலையில் 52 ஏக்கர் பரப்பளவில் ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இது, அந்தமானில் உள்ள சிறைச்சாலை போன்ற அமைப்புடன் கட்டப்பட்டது. சிறைச்சாலை சூரிய கதிர்கள் விரிவடைவது போன்று எட்டு நிலைகளாக கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் 32 தனித்தனி சிறை அறைகள் உள்ளன.

ஒவ்வொரு அறையும் 8 அடி அகலம் 15 அடி நீளத்திலும், முகப்பில் 2 அடி அகலம் 7 அடி உயரத்தில் உள்ளே செல்ல இரும்பு கம்பிகளுடன் கூடிய கதவுகள், பின்புறத்தில் ஜன்னல், அதே அறையில் கழிவறை வசதியுடன் செங்கல் மற்றும் கருங்கல் கட்டுமானங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

எட்டு நிலைகளிலும் உள்ள சிறைச்சாலைகளை நடுவே இருந்து கண்காணிக்கும் வகையில் ஒரு மைய கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையை சுற்றிலும் 20 அடி உயரம் 2 அடி அகலத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், தஞ்சாவூர் பகுதியில் சுதந்திரத்துக்காக போராடியவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் இந்த சிறைச்சாலையில் அடைந்துள்ளனர்.

ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சிறைச்சாலை, சுதந்திரம் பெற்ற பின்னர் பாஸ்டல் பள்ளியாகவும், அதன்பின்னர் சிறுவர்கள் கூர்நோக்கு மையமாகவும் இருந்தது. தற்போது சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சிறைச்சாலையில் உள்ள சிறை அறைகள் அனைத்தும் சிதிலமடைந்து, புதர்கள் மண்டி பாம்புகள் மற்றும் விஷஜந்துகளின் கூடாரமாக மாறி வருகிறது. பராமரிப்பு இல்லாமல் காணப்படும் இந்த சிறைச்சாலையை, நினைவுச்சின்னமாக அறிவித்து, சிதிலமடைந்து காணப்படும் கட்டுமானங்கள் சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை என்.செல்வராஜ் கூறியது: நாட்டின் சுதந்திரத்துக்காக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமானோர் தஞ்சாவூரில் உள்ள இந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலையின் கட்டுமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலடமைந்து வருகின்றன. நகரின் மையப்பகுதியாக உள்ள சிறைச்சாலையின் இடங்கள் அரசின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத்தடுத்து, வருங்கால தலைமுறையினர் சுதந்திர போராட்டங்களை தெரிந்துகொள்ள ஏதுவாக, தஞ்சாவூரில் உள்ள சிறைச்சாலையை நினைவுச்சின்னமாக அறிவித்து, தொல்லியல் துறை மூலம் பராமரித்து, பாதுக்காக வேண்டும் என்றார்.

இதுகுறித்து தஞ்சாவூர் மக்கள் நலப்பேரவை செயலாளர் வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, "தஞ்சாவூரில் உள்ள சிறைச்சாலையில் உப்புசத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட மூதறிஞர் ராஜாஜி அடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே தான் அந்த சிறைச்சாலை வளாகத்திலேயே ராஜாஜி அரசு நடுநிலைப் பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த சிறைச்சாலையின் கட்டிடங்களை சீரமைத்து, பாதுகாக்க வேண்டும். வருங்கால தலைமுறையினர் இந்த சிறைச்சாலையைப் பற்றி தெரிந்து கொள்ள, இதைனை தொல்லியல் துறையினர் பராமரிக்க மத்திய, மாநில உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x