Last Updated : 11 Aug, 2022 11:56 PM

 

Published : 11 Aug 2022 11:56 PM
Last Updated : 11 Aug 2022 11:56 PM

“மூத்த மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன்” - காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் தந்தை

ராணுவ வீரர் லட்சுமணன்

திருமங்கலம்: காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணன் சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய ராணுவ முகாமில் நேற்று காலை தீவிரவாத தாக்குதல் நடந்தது. அப்போது, இந்திய ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தியபோது, இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேரும், தீவிரவாதிகள் 2 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்திய வீரர்கள் 3 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், மதுரை மாவட்டம், திருமங்கலம்- உசிலம்பட்டி செல்லும் சாலையில் உள்ள து.புதுப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தர்மராஜின் 2வது மகன் லட்சுமணன் (25).

பிபிஏ முடித்த லட்சுமணன் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்துள்ளார். துப்பாக்கி சுடும் போட்டியில் ஏற்கனவே திறமை வாய்ந்தவர் என்பதால், ராணுவத்திலும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் தான் காஷ்மீர் பகுதியில் ராணுவ முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, நேற்று காலை தீவிரவாதிகள் தாக்குதலில் லட்சுமணன் வீரமரணம் அடைந்த தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியை அறிந்த அவரது பெற்றோர், உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவரது சொந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. உறவினர்கள், நண்பர்கள் , கிராமத்தினர் லட்சுமணன் வீட்டுக்கு முன்பு குவிந்து வருகின்றனர்.

து.புதுப்பட்டி கிராம மக்கள் கூறியது: தர்மராஜ்- ஆண்டாள் தம்பதியரின் விருப்பத்தின் பேரில், இரட்டை சகோதரர்களான இருவரும் இந்திய ராணுவத்தில் சேர திட்டமிட்டனர். முதலில் லட்சுமணனுக்கு வாய்ப்பு கிடைத்துச் சென்றார். அவரது சகோதரர் ராமன் விவசாய பணி செய்தாலும், ராணுவத்தில் சேர தொடர்ந்து முயற்சிக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, லட்சுமணன் ஊருக்கு வந்தார். அப்போது, எங்களது கிராமத்தில் படித்த இளைஞர்களை இந்திய ராணுவத்தில் சேர உற்சாகப்படுத்திவிட்டுத் தான் சென்றார். நேற்று முன்தினம் இரவு அவரது தாயாரிடம் பேசி நலம் விசாரித்து இருக்கிறார். இதற்கிடையில், அவர் தீவிரவாத தாக்குதலில் மரணம் அடைந்த செய்தி அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி எங்களது கிராமத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது" என்றனர்.

இறந்த லட்சுமணனின் தந்தை தர்மாஜ் கூறும்போது, ‘‘எனது இரு மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க திட்டமிட்டேன். லட்சுமணனுக்கு முதலில் வாய்ப்பு கிடைத்து சென்றார். அவர் முழுமையாக பணிபுரிய முடியாமல் போனது வருத்தம் என்றாலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்திருப்பதை பெருமையாகவே கருதுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் எனது இன்னொரு மகனையும், ராணுவத்திற்கு அனுப்புவேன். லட்சுமணன் விட்டுச் சென்ற பணியை மூத்த மகன் நிறைவு செய்வான்’’ என்றார்.

இதற்கிடையில், வீரமரணம் அடைந்த லட்சுமணன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. நிதியை வழங்க மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி. உதயகுமார், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர் நாளை (ஆக்., 12) து. புதுப்பட்டிக்கு செல்ல இருக்கின்றனர். நேற்று பாஜக மாநில பொதுச்செயலர் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் லட்சுமணன் வீட்டுக்கு சென்று, அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x