Published : 11 Aug 2022 09:01 PM
Last Updated : 11 Aug 2022 09:01 PM
சென்னை: தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இத்திட்டத்தினை அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும் சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான அரசின் நிலைப்பாடு பின்வருமாறு, வேட்டி - சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசினால் 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட ஏதுவாக வருவாய்த் துறைக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11124 பெடல் தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதுடன், தமிழகத்திலுள்ள கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்களுக்கு பயனளிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்குவதற்கான கொள்கை அளவிலான அரசாணைகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டு, வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து உற்பத்தியினை மேற்கொள்ளும் வகையில், ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை, கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் தொடர் வேலை வாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் பொங்கல் 2023-ற்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திடவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ளவும் அரசின் கொள்கை அளவிலான ஆணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இத்திட்டத்திற்காக 2022–2023 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.487.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT