Last Updated : 11 Aug, 2022 05:08 PM

 

Published : 11 Aug 2022 05:08 PM
Last Updated : 11 Aug 2022 05:08 PM

வைகை ஆற்று வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிஐஎஸ்எஃப் வீரர் 3-ம் நாளில் சடலமாக மீட்பு

உயிரிழந்த சிஐஎஸ்எஃப் வீரர் வினோத்குமார் | கோப்புப் படம்

மதுரை: வைகை ஆற்றில் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமான பாதுகாப்பு படை வீரர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேனி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதிகரித்து வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை திருமங்கலம் அருகிலுள்ள கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரான வினோத்குமார் (25) அவரது நண்பர் அன்பரசன் (25) உள்ளிட்ட மேலும், 4 பேர் சோழவந்தான் திருவேடகம் பகுதியிலுள்ள வைகையாற்று தடுப்பணை பகுதியில் 9ம் தேதி மதியம் குளித்துள்ளனர்.

அப்போது, தடுப்பணை சுவரில் நடந்த சென்ற அன்பரசன், வினோத்குமார் ஆகியோர் எதிர்பாராத விதமா தவறி விழுந்ததில் நீர் சுழலில் சிக்கினர். இது குறித்து தகவலறிந்த காட்டுபட்டி போலீஸார், சோழவந்தான், வாடிப்பட்டி தீயணைப்பு வீரர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் தேடினர். சிறிது நேரத்தில் உயிரிழந்த நிலையில் அன்பரசன் உடல் தடுப்பணை பகுதியிலேயே மீட்டனர்.

வினோத்குமாரை தொடர்ந்து இரவு, பகலாக 2 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், 3வது நாளாக இன்று வாடிப்பட்டி, சோழவந்தான், மதுரை தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்த பேரிடர் மீட்பு குழுவினர் அதிகாலை முதல் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆற்றுப் பகுதியில் படகுகளை பயன்படுத்தியும் தேடுதல் பணி நடைபெற்றது. இதனிடையே, மேலக்கால் வைகை ஆற்றுப் பாலம் அருகே அழுகிய நிலையில், வினோத்குமாரின் உடல் அதிகாலை 6 மணி அளவில் மீட்கப்பட்டது. கரைப்பகுதிக்கு வினோத் குமாரின் உடலை கொண்டு வந்தபோது, அங்கு கூடியிருந்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அனுப்பப்பட்டி கிராமத்தினர் கதறி அழுதனர்.

தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன், டிஎஸ்பி பாலசந்தர், ஆய்வாளர் சிவபாலன் உள்ளிட்டோர் வினோத்குமாரின் குடும்பத்தினருக்கும், கிராம மக்களுக்கும் ஆறுதல் கூறினர். பின்னர், அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீஸார் தரப்பில் கூறும்போது, "உயிரிழந்த வினோத் குமார் 7 ஆண்டுக்கு முன்பு மத்திய தொழில் பாதுகாப்பு படை பணியில் சேர்ந்துள்ளார். விடுமுறைக்கு வந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்றபோது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அவருக்கு 9 மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. அவருடைய மனைவி கர்ப்பிணியாக உள்ளார்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x