Published : 11 Aug 2022 03:07 PM
Last Updated : 11 Aug 2022 03:07 PM

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு - பெற்றோர், ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: “பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவச் சமுதாயத்தை வளர்த்தால், போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

போதைப் பொருள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்ற "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "வரவேற்புரை ஆற்றிய நம்முடைய தலைமைச் செயலாளர் ஒரு செய்தியைக் குறிப்பிட்டுச் சொன்னார். நம்முடைய டி.ஜி.பி. “ப்” விட்டுவிட்டார்களே என்று கேட்டபொழுது, அதற்கு அவர் பதில் சொன்னார். இப்போதே விட்டுவிடுகிறோம் அப்படி என்று சொன்னார்கள். எனக்கு தோன்றியது என்னவென்று கேட்டீர்கள் என்றால், அப்போது நடக்காதது, இப்போது நடக்கப் போகிறது. அப்போது நடக்காத எந்த முயற்சியும், இப்போது தீவிரமான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியில் எப்போதும் இருக்காது, இந்த நிலையை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

பெரும்பாலும் நான் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில், குறிப்பிட்டு சொல்வேன், “மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை அடைகிறேன்” என்று சொல்வதுண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்றபோது சொல்ல முடியவில்லை. ஏனென்றால், ஒருவிதமான கவலை அளிக்கும் மனநிலையில்தான் இந்த நிகழ்ச்சியில் நின்று கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை மருந்துகளின் பயன்பாடும் அதற்கு அடிமையாகிறவர்கள் தொகையும், அதிகமாகி வருவதை நினைக்கும்போது, எனக்கு கவலையும் வருத்தமும் அதிகமாகிறது. இதனை தடுக்க வேண்டுமானால் இரண்டு விதமான முறைகளில் நாம் சென்றாக வேண்டும். முதல் வழி, போதை மருந்து நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது. அதனை விற்பனை செய்பவர்களைக் கைது செய்வது! போதை மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்த்துவதும் இரண்டாவது வழி.

முதல் வழி சட்டத்தின் வழி! இதனை அரசும் - குறிப்பாக, காவல் துறையும் கவனிக்கும்! இரண்டாவது வழி என்பது விழிப்புணர்வு வழி! பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டும்தான் அத்தகைய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும்.

சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்யவேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடந்தது. காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரைக்கும், அதில் அறிவுரைகளும், ஆலோசனைகளும், கருத்துக்களும் என்ன நிலைமை என்பது பற்றியெல்லாம், அலசி ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அதற்குரிய திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம்.

எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டேன் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால், நிச்சயமாக போதை நடமாட முடியாது என்று நான் சுட்டிக் காட்டி பேசி இருக்கிறேன்.

கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுத்தாக வேண்டும், மலையடிவாரங்களைக் கண்காணித்தாக வேண்டும், அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுத்தாக வேண்டும், எல்லை மாவட்டங்களில் சோதனைச் சாவடிகளை அதிகப்படுத்த வேண்டும், கடலோர மாவட்டங்களில் நிச்சயமாக கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும், காவல் துறையினரின் ரோந்து அதிகரிக்க வேண்டும், அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், போதைப் பொருள்கள் அதிகம் விற்பனையாகும் இடங்களை நிரந்தரமாக கண்காணிக்க வேண்டும், பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு அருகில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறேன்.

அரசும் இது தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. சட்டங்களைத் திருத்த இருக்கிறோம். சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம். போதை மருந்து விற்பவர்களது சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்யப்பட இருக்கிறது. இதற்காக சைபர் செல் உருவாக்கப்பட உள்ளது. போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு என்று தனியாக ஒரு “இன்டெலிஜென்ஸ் செல்” ஏற்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான உறுதியை மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். இவை அனைத்தும் அரசாங்கத்தின் கடமை!

இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரியைப் போலச் செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்றும் அதிகாரிகள் கூட்டத்தில் உறுதி அளித்திருக்கிறேன். இவற்றை நாங்களும், அரசு அதிகாரிகளும் காவல் துறையும் பார்த்துக் கொள்வோம். சட்டம் அதன் கடமையைச் செய்யும்! சட்டம் அதன் கடமையை உறுதியாகச் செய்யும்! அப்படி அந்த கடமையைச் செய்யத் தவறக்கூடிய அதிகாரிகள்மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக கடுமையாகக் கூற விரும்புகிறேன்.

இப்போது தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. குற்றங்கள் குறைந்துள்ளன. குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு முறையான தண்டனையும் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அதிலும் குறிப்பாக, போதை மருந்து விற்பனை செய்யக்கூடிய குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களை தனிப்பட்ட குற்றவாளிகளாகக் கருத முடியாது. இந்தச் சமூதாயத்தையே கெடுக்கக்கூடிய குற்றவாளிகள். சமூகத்தில் தீராத பெரும் நோயைப் பரப்பக்கூடிய குற்றவாளிகளாக அவர்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எந்தவித தயக்கமும் காட்டாது.

திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுவரை ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. அதை எப்படியாவது பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் கைக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விடுகிறது. இந்த சங்கிலியை உடைத்தாக வேண்டும். போதைப் பொருளானது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு போய்ச் சேரும் சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் “திருடாதே” என்ற திரைப்படத்தில் ஒரு பாட்டை எழுதினார்கள். ரொம்ப ஃபேமஸ் ஆன பாட்டு, “திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது - அதைச் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” - என்று எழுதினார் பட்டுக்கோட்டையார்.

எந்தக் குற்றமாக இருந்தாலும், அதில் சட்டத்தின் பங்கு பாதிதான். குற்றவாளிகளின் மனமாற்றமானது பாதியளவு இருக்க வேண்டும். அதிலும் போதைப் பொருள்கள் பயன்பாடு என்பது அதனைப் பயன்படுத்துபவர்களின் விருப்பமாக இன்னும் சொன்னால், அவர்கள் அதிகப்படியாக அடிமையாகி விடுகிறார்கள். மீளமுடியாத அளவுக்குச் சிலர் போய்விடுகிறார்கள். இவர்களை திருத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

சாதாரண நோயாக இருந்தால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற அவரது பெற்றோர், குடும்பம், உறவினர்கள் போதும்! ஆனால் போதை போன்ற சமூக நோயாக இருக்குமானால் அதில் பாதிக்கப்பட்டவரைக் காப்பாற்ற ஒட்டுமொத்த சமூகமே முயற்சிகள் எடுத்தாக வேண்டும். போதை என்பது ஒருவரை அழித்து, சமூகத்தையும் அழித்துவிடும்.

பெரும்பாலும் தனக்கு வந்த பிரச்னையில் இருந்து மீள்வதற்காக போதையை பலரும் நாடுகிறார்கள்.படிப்பு சரியாக வரவில்லை,மனக்கவலை ஏற்பட்டுள்ளது, வாழப்பிடிக்கவில்லை என எத்தனையோ காரணங்களை சொல்லிக் கொள்கிறார்கள். இவை காரணங்களில் எந்தப் பொருளும் இல்லை. போதைக்குக் காரணங்களைத் தேடாதீர்கள்! பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுங்கள்! அதனுடைய முடிவில் வெற்றி காத்திருக்கும்!

வெற்றியை நீங்கள் சுவைக்கத் தொடங்கிவிட்டால், அதுவே உங்களைப் பல உயரங்களுக்கு இட்டுச் செல்லும்! மாறாக, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் பிரச்சினைகள் அதிகமாகுமே தவிர குறையாது. ஒரு பிரச்சினையில் இருந்து விடுபடக்கூடியவர்கள், இன்னொரு பெரிய பிரச்னையில் யாரும் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் பெரிய பிரச்சனையில் சென்று மாட்டிவிடுகிறீர்கள். போதையால் மனப் பிரச்சினைகள் ஏற்படும்! சட்டப் பிரச்சினையும் ஏற்படும்! அது கடுமையாக இருக்கும்! போதைக்குத் தெரிந்த ஒரே பாதை, அழிவுப்பாதைதான்!

போதை மருந்தின் தீமைகளை பட்டியலிடுங்கள் என்று மருத்துவர்கள் சென்று சிலரிடம் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள், அதைக் கேட்டபோது பீதியே ஏற்பட்டது. இந்தப் போதையை விலை கொடுத்து வாங்கலாமா? இந்த அழிவுப்பாதையில் செல்லலாமா? இத்தகைய மோசமான வாழ்க்கை தேவையா? போதையின் இத்தகைய கொடுமையான தன்மையை நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும்.விலைமதிப்பு இல்லாத மனித உயிர்களை இப்படி ஒட்டுமொத்தமாக சிதைத்துக் கொள்ளக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிமனிதனின் பிரச்சினை அல்ல. சமூகப் பிரச்சினை! போதை என்பதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் சமூகத்தில் குற்றங்களை தடுக்க வேண்டும் என்பதுதான். ஒருவர் போதையைப் பயன்படுத்தி விழுந்து கிடப்பதின் காரணமாக, மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்கக் கூடாது. போதைதான் கொலை, கொள்ளை, பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுகோளாக இருக்கிறது.

இத்தகைய குற்றம் செய்தவர்களில் பெரும்பாலானவர்கள், போதையை பயன்படுத்துபவர்களாக இருக்கக்கூடியவர்கள் அல்லது போதை உட்கொண்ட நிலையில் இக்குற்றத்தினைச் செய்திருப்பார்கள். போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுத்தல் என்பதை இந்தச் சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும்.இது மக்கள் இயக்கமாகச் செயல்பட வேண்டும்!

போதை மருந்தை பயன்படுத்துபவர் இதில் இருந்து விடுபட வேண்டும், விடுபட்டவர், போதை பயன்பாட்டுக்கு எதிராக பரப்புரைச் செய்தாக வேண்டும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதைப் பொருளை பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும், இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது, இதே பணி, கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு இருக்கிறது, வியாபாரிகள், கடைக்காரர்கள் இதை விற்கமாட்டேன் என உறுதி எடுக்க வேண்டும், போதையின் தீமையை மருத்துவர்கள், குறிப்பாக மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும், போதையில் விழுந்தவர்களை மீட்கும் பணியை சமூகநல அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்தாக வேண்டும் ஆகியவைகளை நாம் தொடர்ச்சியாக செய்தாக வேண்டும்.

இதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் பங்கு மிகமிக முக்கியமானது! பாதி நேரம் பெற்றோருடனும், பாதி நேரம் ஆசிரியர்களுடனும்தான் படிக்கும் காலத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரத்தை செலவு செய்ய வேண்டும்.

மனம் விட்டுப் பேசுங்கள்,‘பள்ளியில் என்ன நடந்தது என்று கேளுங்கள், என்ன சொல்லிக் கொடுத்தார்கள் என்று கேளுங்கள், இன்றைய நாள் எப்படி போனது, என்ன தேவைப்படுகிறது’ என்றெல்லாம் நாள்தோறும் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் விசாரிக்க வேண்டும். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்கள், வெளியில் எங்கேயாவது போவதென்றால் சேர்ந்து போங்கள், உறவினர்களுடன் பழகுங்கள், குடும்ப விழாக்களில் பங்கெடுத்து அதுபோல உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை நீங்கள் செலவு செய்யுங்கள்.

குழந்தைகளோடு இயல்பாகப் பழகுங்கள்! நண்பர்களாக அவர்களை அணுகுங்கள்!அன்போடு அவர்களிடம் பேசுங்கள்! எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளைக் கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்! அதே மாதிரி தான் கண்டிப்பு, கண்டிப்பு தேவை தான், ஆனால் அதே கண்டிப்பும் ஆபத்தாகவும் போய் முடிகிறது. அதே மாதிரி கவனிப்பே இல்லாத வாழ்க்கையும் ஆபத்துதான். இதே கடமை ஆசிரியர்களுக்கும் உண்டு! நீங்கள் கண்டிப்புடனும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் கனிவுடனும் இருக்க வேண்டும்.

மாணவ, மாணவியரிடம் படிப்பைத் தாண்டியும் பல நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள். முக்கால் மணிநேரப் பாடவேளையில் ஐந்து நிமிடமாவது பொதுவான விஷயங்களை அவர்களிடம் பேசுங்கள். வகுப்பில் யாராவது சோர்வாக காணப்பட்டால், யாரிடத்திலும் ஒட்டாமல் இருந்தால், அந்த மாணவ, மாணவியரைக் கூப்பிட்டு தனியாக அழைத்துப் பேசுங்கள். அவர்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்களும் உங்கள் பிள்ளைகள்தான். அவர்கள் நல்லவர்களாக வளர்ந்தாலும், பெருமை உங்களுக்குத்தான். அவர்கள் கெட்டவர்களாக ஆனாலும், தாழ்ச்சி உங்களுக்குத்தான்.

ஆக, பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவச் சமுதாயத்தை வளர்த்தால், போதை போன்ற தவறான பழக்கங்களில் யாரும் ஈடுபட மாட்டார்கள். சட்டத்தின் காவலர்களாக போதைப் பொருள்களைத் தடுக்க மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இருப்பதைப் போல, விழிப்புணர்வின் காவலர்களாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த இரண்டு கைகளும் சேர்ந்தால்தான், போதையின் பாதையை நாம் தடுக்க முடியும். மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான், போதையுடன் கைகுலுக்காதீர். வாழ்க்கையே கைநழுவிப் போய்விடும்! மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான் போதை பாதை அழிவுப்பாதை. அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான், போதைக்குத் தெரிந்தது அழிவுப் பாதை மட்டும்தான். அனைவருமே இப்பாதையை தடுக்கும் காவலர்களாக நீங்கள் மாற வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் போதை மருந்து பழக்கங்கள் குறைந்து ஆசிய நாடுகளில் அதிகமாகி வருவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. மேற்கத்திய நாடுகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு அதிகமானதுதான் இதற்குக் காரணம்.

அத்தகைய விழிப்புணர்வு பரப்புரையில் மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் அனைவரும் ஈடுபட வேண்டும். இதுவும் மக்களைக் காக்கக்கூடிய பணிதான் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. போதை மருந்துகள் நம் மாநிலத்துக்குள் நுழைவதைத் தடுத்தாக வேண்டும். பரவுவதை தடுத்தாக வேண்டும். விற்பனையாவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துவதை தடுத்தாக வேண்டும். பயன்படுத்துபவர்களை அதில் இருந்து மீட்டாக வேண்டும். இதுவரை பயன்படுத்தாத இன்னொருவர் கைக்கு அது போய்ச்சேராமல் தடுத்தாக வேண்டும். போதையின் பாதையை அடைப்பதும் எளிதுதான். போதையில் இருப்பவரை மீட்பதும் எளிதுதான். அதனை அவர்களுக்கு சொல்லவேண்டிய முறையில் சொல்லியாக வேண்டும்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x