Published : 11 Aug 2022 01:53 PM
Last Updated : 11 Aug 2022 01:53 PM

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தால் எண்ணெய் பொருட்கள் விலை கட்டுப்பாட்டுக்கு வரும்: கே.எஸ்.அழகிரி

தருமபுரி: குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்தால், எண்ணெய் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்கு வரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இந்திய சுதந்திர பவள விழா ஆண்டு கொண்டாட்டத்தை ஒட்டி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுக்க பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று (வியாழன்) தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் நடந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார்.

முன்னதாக, பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டபத்தில் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இருந்து பாதயாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி கூறியதாவது: "இந்திய சுதந்திர தினத்தை அனைவரும் கொண்டாடுவது வரவேற்கத்தக்கதுதான். காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் இந்திய சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கும் சென்றுள்ளனர். ஆனால் பாஜக தரப்பிலோ, ஆர்எஸ்எஸ் தரப்பிலோ யாரும் சுதந்திரத்திற்காக போராடவும் இல்லை. சிறைக்குச் சென்றதும் இல்லை.

இப்போது சுதந்திர தினம் குறித்து அக்கறை கொள்பவர்கள் இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தார்கள்? ஆளுநர் மாளிகை அரசியல் பேசுவதற்கான இடம் இல்லை. அதற்கான மரபை பின்பற்ற வேண்டும். அன்றாட தேவைகளில் எண்ணெய் வித்துப் பயிர்கள் முக்கிய இடம் பெறுகிறது. சமையலுக்கு தேவையான எண்ணெய்யை பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.

எண்ணெய் வகைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைகின்றனர். புன்செய் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இதன்மூலம் எண்ணெய் பொருட்களின் விலை கட்டுப்பாட்டுக்கு வரும். உற்பத்தியும் அதிகரிக்கும்." என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x