Published : 11 Aug 2022 04:50 AM
Last Updated : 11 Aug 2022 04:50 AM
சென்னை: வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
இதற்காக, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) அல்லது தமிழக மின்வாரிய இணையதளங்களில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இந்த மானியத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மத்திய அரசிடம் இருந்து பெற்று பயனாளிகளுக்கு வழங்கும். இவ்வாறு வழங்கும்போது சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது.
எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சூரியசக்தி மின்னுற்பத்திக்கான நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் பெற விரும்புவோர் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், வங்கிக் கணக்குஎண், மின்நிலை திறன் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்களை பரிசீலனைசெய்து மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக செலுத்தும்என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT