Published : 11 Aug 2022 05:13 AM
Last Updated : 11 Aug 2022 05:13 AM
சென்னை: தமிழக சட்டக்கல்வித் துறையின் முதல் பெண் இயக்குநராக பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சட்டக்கல்வி இயக்குநரகத்தின் இயக்குநராக இருந்த டி.சொக்கலிங்கம் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் இயக்குநர் பணியானது பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமிக்கு முழு கூடுதல் பொறுப்பாக கடந்த மே 31-ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டக்கல்வித் துறையின் புதிய இயக்குநராகவும் தற்போது அவரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 25-ம்தேதி பொறுப்பேற்றுக் கொண்ட விஜயலட்சுமி, பாண்டிச்சேரியில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் ஆராய்ச்சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை பேராசிரியராகக் கல்விப்பணியை தொடங்கிய இவர், 24 ஆண்டுகால கற்பித்தல் அனுபவம் கொண்டவர்.
செங்கல்பட்டு, வேலூர், சென்னை பட்டறைப்பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வராகவும் இவர் பணியாற்றியுள்ளார். சட்டக்கல்வி இயக்குநரகத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் பெண் இயக்குநர் பொறுப்பேற்றிருப்பது இதுவே முதல்முறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT