Last Updated : 15 Oct, 2016 07:49 AM

 

Published : 15 Oct 2016 07:49 AM
Last Updated : 15 Oct 2016 07:49 AM

சென்னை குடிநீரில் சிவப்பு புழுக்கள்: பொதுமக்கள் புகாரால் அதிகாரிகள் ஆய்வு

சென்னையில் வில்லிவாக்கம், மேத்தா நகர் உட்பட பல பகுதிகளில் குடிநீரில் சிவப்பு புழுக்கள் வருவதால் அதைப் பயன்படுத்த முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்இருப்பு குறைவாக இருக்கிறது. இதனால் குழாய் வழியே தண்ணீரை அனுப்பும்போது பல இடங்களில் நீர்அழுத்தம் குறைவாக உள்ளது. இதனால் போதியளவு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நகரின் பல இடங்களில் குடிநீருக்குள் சிவப்பு புழுக்கள் நெளிவதால் அதைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

வில்லிவாக்கம், அயனாபுரம், மேத்தா நகர் போன்ற பல்வேறு இடங்களில் தேவையான அளவுக்கு குடிநீர் விநியோகம் இருந்தாலும் அதில் சிவப்பு புழுக்கள் இருப்பதால் சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அயனாபுரம் பச்சக்கல் வீராசாமி தெருவில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைச் சேர்ந்த ரதி, மேத்தா நகரைச் சேர்ந்த செல்வி ஆகியோர் கூறும்போது, “சென்னைக் குடிநீரை அன்றாடம் பயன்படுத்திவிட்டால், புழுக்கள் வருவதில்லை. ஓரிரு நாள் பாத்திரத்தில் பிடித்து வைத்தால் புழுக்கள் காணப்படுகின்றன. மேத்தா நகரின் பல பகுதியில் குழாயைத் திறந்தால் சிவப்பு புழுக்களாக வந்து விழுகின்றன. அதைப் பார்த்து அருவருப்படைந்து அந்த நீரை பயன்படுத்தப் பிடிக்காமல் கேன் வாட்டர் வாங்கிப் பயன்படுத்துகிறோம். குடிநீர் கட்டணம் செலுத்துகிறோம். ஆனால் எங்களுக்கு தரமான குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை” என்றனர்.

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சாந்தவதனம் கூறும்போது, “சென்னைக் குடிநீர் குழாயில் தண்ணீர் அடிக்கும்போது சிகப்பு புழுக்கள் வருகின்றன. சில நேரங்களில் கழிவுநீர் கலந்து வருகிறது” என்றார்.

வீடுகளில் ஆய்வு

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “வீடுக ளில் உள்ள தரைமட்டத் தொட்டிகளில் கொசுப் புழு ஒழிப்புப் பணிக்கான திரவம் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஊற்றப்படுகிறது. சிகப்பு புழுக்களைக் கட்டுப்படுத்த குடிநீர் வாரியம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி கூறும்போது, “தரைமட்டத் தொட்டிகளில் வந்து விழும் குடிநீரில் சிவப்பு புழுக்கள் இல்லை. புகார் வந்த இடங்களில் சோதித்துப் பார்த்தபோது இது தெரியவந்தது. தரைமட்டத் தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்யாவிட்டாலோ அல்லது அதில் நீண்டநாள் குடிநீரைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலோ சிவப்பு புழுக்கள் வந்துவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்துவதில் மாநகராட்சிக்கும் பொறுப்பு இருக்கிறது. மக்களிடமும் விழிப்புணர்வு அவசியம்” என்றார்.

இந்த விஷயத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x