Published : 16 Oct 2016 12:08 PM
Last Updated : 16 Oct 2016 12:08 PM
கோவை நஞ்சுண்டாபுரத்தில் பணிகள் முற்றுப்பெறாத நிலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் புதர் மண்டியும், அதற்காக வாங்கப்பட்ட கருவிகள் பாதுகாப்பின்றி, வீணாகக் கிடப்பதாகவும் புகார் தெரிவித்துள்ள பொதுமக்கள், அவற்றைப் பத்திரப்படுத்தி, பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், ஹோட்டல்களில் வெளியேறும் கழிவுநீரைக் கொண்டு செல்வதற்காக ரூ.377.13 கோடியில் பாதாள சாக்கடை அமைக்கத் திட்டமிடப்பட்டது.
ஜவஹர்லால் நேரு புனரமைப்புத் திட்டம் மூலம், 10 ஆண்டுகளுக்கு முன் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டது. சுமார் 10.50 லட்சம் மக்கள் வெளியேற்றும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக, உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூரில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டது. இதில் 70 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட, உக்கடம் கழிவுநீர் மையம் மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது. ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் முடிவடைந்தாலும், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு குழாய் அமைக்கும் பணிக்கு, நெடுஞ்சாலைத் துறையின் ஒப்புதல் கிடைக்காததால் இப்பணி நிறைவடையவில்லை.
ரூ.33.79 கோடியில்…
ஆனால், நஞ்சுண்டாபுரம் பகுதியில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையம்தான் பரிதாபமான நிலையில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இங்கு 40 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட, நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள், ரூ.33.79 கோடியில் தொடங்கின.
ஆனால், அருகில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தோர், சுத்திகரிப்பு நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி, எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்திலும் தடையாணை பெற்றனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால், சுத்திகரிப்பு நிலையத்துக்கென வாங்கப்பட்ட கருவிகள் புதர் மண்டிக் கிடக்கின்றன.
வீணாகும் கருவிகள்…
மேலும், சுத்திகரிப்பு நிலையத் துக்காக கட்டப்பட்ட கட்டிடங்கள் உள்ளிட்டவையும் இடிபாடுகளுடன் காட்சியளிக்கின்றன. சுத்திகரிப் புக்குப் பயன்படுத்தப்படும் பெரிய கருவிகள் துருப்பிடித்து, மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு சுற்றுச்சுவரோ, காவலாளியோ இல்லை. இதனால், இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுகின்றன. “நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வாங்கப்பட்ட பொருட்களை பாதுகாக்க வேண்டாமா? இதுவே, தனியார் நிறுவனமாக இருந்தால், இப்படி வீணாக்குவார்களா?” என்று இப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், அடர்ந்த புதர்களில் இருக்கும் பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துகள், குடியிருப்புகளில் நுழைகின்றன.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கூறும்போது, “இதுபோன்ற சுத்திகரிப்பு நிலையங்களை குடியிருப்புகளுக்கு 500 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால், இங்கு 50 மீட்டர் தொலைவிலேயே அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளன. அங்கு ஆயிரக்கணக்கானோர் வசிக்கிறார்கள். எனவே, வேறு இடத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென்று நாங்கள் வலியுறுத்தியபோதும், எவ்விதப் பயனுமில்லை. இதனால், சுத்திகரிப்பு நிலையப் பணிகள் பாதியில் நிற்பதுடன், பல கோடி மதிப்பிலான பொருட்களும் வீணாகின்றன. அதுமட்டுமன்றி, பாதாள சாக்கடைத் திட்டத்தையும் நிறைவேற்ற முடியாமல், கழிவுநீரை குளம், குட்டை, வாய்க்கால்களில் விடுகின்றனர்.” என்றார்.
கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் பணிகள் முற்றுப்பெறாத நிலையில் உள்ள பாதாள சாக்கடைத் திட்ட சுத்திகரிப்பு நிலையக் கட்டிடம். (அடுத்த படம்) உரிய பாதுகாப்பின்றி, புதர்களுக்கு நடுவில் கிடக்கும் கருவிகள்.
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மாநகராட்சி சார்பில் எங்களது தரப்பு நியாயத்தை எடுத்து வைத்துள்ளோம். அந்த சுத்திகரிப்பு நிலையத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT