Published : 10 Aug 2022 08:09 PM
Last Updated : 10 Aug 2022 08:09 PM
மதுரை; தென்தமிழகத்திலே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப் பெறுவதற்காக ‘பே வார்டு’கள் அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ் 300-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் தினமும் சுமார் 10 லட்சம் மக்கள் உள் நோயாளிகளாகவும், வெளி நோயாளிகளாகவும் சிகிச்சைப்பெறுகிறார்கள். இதில், சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அதிக நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் வெளி நோயாளிகள், 3,500 உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத அளவுக்கு அதிநுட்பமான அறுவை சிகிச்சைகள் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடக்கிறது. அதனால், இந்த மருத்துவமனை தென் தமிழகத்தை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையாகவும், உயிராதாரமாகவும் திகழ்கிறது. ஆனாலும், மருத்துவமனை வார்டுகள், தனியார் மருத்துவமனைகள் போல் பராமரிக்கப்படாததால் அங்கு நிலவும் சுகாதாரச் சூழல் நடுத்த மக்கள் சிகிச்சைப் பெற வர தயங்குகின்றனர்.
அதனால், அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். அனைத்து தரப்பு மக்களையும் அரசு மருத்துவமனைக்கு வர வைக்க அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனியாரை போல் நோயாளிகள் கட்டணம் அடிப்படையில் சிகிச்சைப்பெறுவதற்கு ‘பே வார்டு’ திட்டத்தை சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.
தென்தமிழகத்தில் முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘பே வார்டு’கள் தொடங்கப்பட இருக்கிறது. இதற்கான சிவில் ஒர்க் தொடங்குவதற்கு தமிழக அரசு, மதுரை அரசு ராஜாஜி மருத்துமவனைக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து ‘டீன்’ ரத்தினவேலு கூறுகையில், ‘‘மதுரை மட்டுமில்லாது சேலம், கோவை மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த ‘பே வார்டு’கள் உருவாக்கப்பட இருக்கிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 18 ‘பே வார்டு’கள் அமைக்கப்படுகிறது. சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கட்டிடத்தில் 10 ‘பே வார்டு’களும், அண்ணா பஸ்நிலையம் அருகே உள்ள தலைக்காய அவசர அறுவை சிகிச்சைப்பிரிவு கட்டிடத்தில் 8 ‘பே வார்டு’களும் அமைக்கப்படுகிறது.
இதற்கென்று தனி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்கள் நியமிப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களே அந்த வார்டுகளிலும் பணிபுரிவார்கள். வார்டுகள் மட்டும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளதை போல் ‘ஹைடெக்’ வடிவில் அனைத்து வசதிகளுடன் அமைத்து பராமரிக்கப்பட உள்ளது.
தற்போது இந்த வார்டுகள் அமைப்பதற்கான சிவில் ஒர்க் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அப்பணிகள் தொடங்க உள்ளது. பே வார்டுகளில் தங்கி சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT